அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்- முதலமைச்சருக்கு பிரேமலதா கோரிக்கை

201 0

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், டாஸ்மாக் கடைகளை மூடுதல், ஆசிரியர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக கவர்னரிடம் மனு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து பெற வேண்டிய நீரை அனைவரும் ஒன்று சேர்ந்து பெற வேண்டும். தற்போது கர்நாடகத்தில் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு நடந்து வருகிறது.

அங்கு எத்தனையோ கட்சிகள், அமைப்புகள் உள்ளன. ஆனாலும் ஒட்டு மொத்தமாக அனைவரும் ஒன்று கூடி கர்நாடக உரிமைக்காக குரல் எழுப்புகின்றனர்.

இந்த நேரத்தில் தமிழர் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவரும் விவசாயிகளுக்கு பலமாக இருந்து குரல் கொடுக்க வேண்டும். 60 ஆண்டு கால அரசியலில் இருந்து இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டீர்களா?அனைத்து கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளையும் அழைத்து டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத் தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது நதிநீர் இணைப்பு குறித்து வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.