இலங்கை ஏற்படுத்திய 30/1 தீர்மானத்தில் 19.4 வீத உறுதி மொழிகளை மாத்திரமே நிறைவேற்றியுள்ளது

134 0
  • ‘மோசமான’ அல்லது ‘முன்னேற்றமற்ற’ நிலையில் 60% க்கும் அதிகமான உறுதிமொழிகளின் நிலை இருப்பதை ‘UNHRC மொனிடர் ‘ காட்டுகிறது.

2023 ஆகஸ்ட் மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30/1 தீர்மானத்தின் கீழ் அமுல்படுத்த உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் 19.4% மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் வெளியிட்டுள்ள UNHRC மொனிடர் .

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை, 2015 ஒக்டோபரில் இத் தீர்மானத்தை ஒப்புக்கொண்டு தற்போது எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தீர்மானத்தில் உள்ள  61.1%  உறுதிமொழிகள் ‘மோசமான’ அல்லது முன்னேற்றமற்ற’ நிலையையே அடைந்துள்ளது.

வெரிட்டே ரிசர்ச்சின் ‘UNHRC மொனிடர் ‘ என்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சமின்றி முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் முதல் மற்றும் ஒரே ஒரு கண்காணிப்பு கருவியாகும். 2023 செப்டெம்பர் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான எழுத்துமூலமான இற்றைப்படுத்தல் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

30/1 தீர்மானமானது 36 தனித்துவமான செயல்பாட்டு உறுதி மொழிகளை உள்ளடக்கியது. இவ் உறுதி மொழிகளில், 7 (19.4%) ‘நிறைவேற்றப்பட்ட’ உறுதி மொழிகளாகவும், 7 (19.4%) ‘பகுதியளவு முன்னேற்றம்’ அடைந்த உறுதிமொழிகள் எனவும், 18 (50%) ‘பலவீனமான முன்னேற்றம்’ பெற்ற உறுதிமொழிகள் எனவும், 4 (11.1%) ‘முன்னேற்றமற்ற’ உறுதிமொழிகள் எனவும் ‘UNHRC மொனிடர் ‘  வகைப்படுத்தியுள்ளது.

இவ் உறுதி மொழிகளை ஐந்து பரந்த கருப்பொருள்களின் கீழ் வகைப்படுத்தலாம்: உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி (15 உறுதி மொழிகள்), நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கம் (9), பாதுகாப்பு மற்றும் இராணுவமயமகற்றல் (7), சர்வதேச தலையீடு (3) மற்றும் அதிகாரப் பகிர்வு (2).

நிறைவேற்றப்பட்ட ஏழு உறுதிமொழிகளாக: (1) பரந்த நிலைமாற்று நீதி செயல்முறைகளில் ஈடுபடுதல்; (2) காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தை நிறுவுதல்; (3) இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தை நிறுவுதல்; (4) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் கையொப்பமிடுதல் மற்றும் ஒப்புதல் அளித்தல்; (5) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதை குற்றவியல் குற்றமாக்குதல்;(6) இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் (OHCHR) இடையில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு; மற்றும் (7) சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணை வைத்திருப்பவர்களுடன் ஒத்துழைத்தல் என்பன  அடையாளம்காண முடிகின்றது.

(1) கடந்த கால ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை பிரசுரித்தல் மற்றும் (2) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தோன்றாமைக்கான  சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட ஏழு உறுதிமொழிகள் பகுதியளவு நிறைவேற்றப்பட்டுள்ளன.

(1) பொதுமக்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்கு மீட்டமைத்தல்; (2) ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மத சிறுபான்மையினர் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான தாக்குதல்களை விசாரணை செய்வது; ((3) அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிதல்; மற்றும் (4) எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பது ஆகியன 2015 ஆம் ஆண்டு முதல் ‘மோசமான முன்னேற்றத்தை’ அடைந்துள்ள சில முக்கிய உறுதிமொழிகளாகும்.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களை விசாரிக்க சர்வதேச தலையீட்டுடன் சிறப்பு ஆலோசனை மற்றும் நீதித்துறை பொறிமுறையை நிறுவுவது எனும் உறுதிமொழி 2018 பெப்ரவரி மாதம் முதல் ‘முன்னேற்றமற்ற’ நிலையில் உள்ளது. 2015 முதல் ஆட்ச்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கத்திற்கும் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வது எனும் உறுதிமொழியில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை.

2017 மார்ச்சில் நடைபெற்ற 34 வது ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்வில், இலங்கை அரசாங்கம் 34/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது – இது 30/1  தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 2019 மார்ச்சில் நடைபெற்ற 40வது அமர்வில், அரசாங்கம் 40/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதுடன், 30/1 தீர்மானத்தில் திட்டமிடப்பட்டுள்ள நல்லிணக்கத்திற்கான உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் 2020 பெப்ரவரியில், 2019 இன் 40/1 தீர்மானத்திற்க்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து தாம் விலகிக்கொள்வதாகவும், அதன் முந்தைய 2017 மார்ச் 34/1, 2015 ஒக்டோபர் 30/1 தீர்மானங்களில் இருந்தும் தாம் விலகிக்கொள்வது எனும் முடிவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு (OHCHR) அறிவித்தது.

2016 ஜூன், 2017 மார்ச், 2018 பெப்ரவரி, 2019 மார்ச், 2020 பெப்ரவரி, 2021 பெப்ரவரி, மார்ச் 2022, 2023 பெப்ரவரி மற்றும் 2023 ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் 30/1 தீர்மானத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றம் பற்றிய பகுப்பாய்வை வெரிட்டே ரிசர்ச் வெளியிட்டுள்ளது.