தமிழக மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், தனித்திறமை கொண்டவர்களாகவும் வளர வேண்டும் என்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கொளத்தூர், வீனஸ் எவர்வின் பள்ளி மைதானத்தில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கொளத்தூர் தொகுதி இளைஞர்களும், மாணவர்களும் தங்கள்திறன்களை மேலும் வளப்படுத்தி, வேலைவாய்ப்பை பெறும் நோக்கில்தான் இந்த, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கப்பட்டது.
நீட் என்ற கொடுமையான தேர்வுக்கு என்று முற்றுப்புள்ளி வைக்கிறோமோ, அன்றுதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தும் நாளாக அமையும். நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை நமக்கு உணர்த்திக் கொண்டேஇருக்கின்றனர்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தொடங்கியதில் இருந்து, டேலி படிப்பை இதுவரை 9 ‘பேட்ச்’ முடித்து, 743 மாணவிகள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆண்களில், இதுவரை 5 பேட்ச் முடித்து, 381 மாணவர்கள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர். இன்று, மேலும் 136மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
கனவுத் திட்டம்: தையல் பயிற்சியை பொறுத்தவரை, இதுவரை 5 பேட்ச்சில் 1,467 பெண்கள் இலவச பயிற்சி முடித்து,சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற்றுள்ளனர். இன்று 6-வது பேட்ச்சில் 359 பெண்களுக்கு சான்றிதழ், தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
தற்போது, 491 மாணவ மாணவிகள் டேலி மற்றும் தையல் பயிற்சியை பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. தமிழக மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், தனித்திறமை கொண்டவர்களாகவும் வளரவேண்டும். அதற்காகத்தான் `நான்முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
இது என்னுடைய கனவுத் திட்டம். ஆண்டுக்கு,10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம். ஆனால் கடந்த ஆண்டு13 லட்சம் மாணவர்கள் இதில்பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகிடைத்து வருகிறது.
வளர்ச்சிக்கான முதலீடு: அனைத்துத் தரப்பினர் நலனையும், பாதுகாத்து வரும் அரசுதான் இந்த அரசு. ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது முதல் சமூகநீதி அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளன.
இந்த திட்டங்களுக்கான செலவுகளை நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கிறோம்.
அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இத்திட்டம்மூலம் உதவித்தொகை அல்ல; உரிமையை கொடுக்கிறோம். இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகின்றனர். ஏழை, எளிய பெண்களுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவைஇல்லாத பொருளாதார விடுதலையையும் இந்தத் திட்டம் நிச்சயமாக அளிக்கப் போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, எஸ்.ஆர்.பி.கோயில் வடக்கு தெருவில், ரூ.6.27 கோடியில்திருவிக நகர் பேருந்து நிலைய புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின், தான்தோன்றியம்மன் கோயில் தெருவில் ரூ.11.30 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட ஆனந்தன் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன்பிறகு, பூம்புகார் நகர் 4-வதுகுறுக்குத் தெருவில் உள்ள பூங்காவில் பல்வேறு புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வுகளில் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

