நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, கடந்த மாதம்28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிசீமான் என்னை திருமணம் செய்துகொண்டார். இதை வெளியே சொல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டதால் நான் யாரிடமும் சொல்லவில்லை.
கணவன், மனைவியாக வாழ்ந்ததில் 7 முறை கர்ப்பமானேன். அதைஎன்னுடைய அனுமதி இல்லாமலேயே அவர் மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். மேலும், நான் சினிமாவில் நடித்து சேமித்து வைத்திருந்த ரூ.60 லட்சம், ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் அளித்த புகார் தொடர்பாக சீமான்மீது 2011-ல் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

எனவே, என்னுடன் வாழ்ந்து, என் வயிற்றில் இருந்த கருவைஎன் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து, என்னுடைய பணம், நகைகளை பறித்து, தற்கொலைக்கு தூண்டி, என் வாழ்க்கையை சீரழித்த சீமான் மீதும், அவரது தூண்டுதலின்பேரில் மிரட்டும் மதுரை செல்வம்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, அண்ணாநகர் காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான தனிப்படை போலீஸார் விஜயலட்சுமியை நேரில் வரவழைத்து விசாரித்தனர். மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று
ஆஜராக சம்மன் வழங்கப்பட்ட நிலையில் அவரது சார்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார்.
இதனால் அப்பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்
ஏராளமானோர் திரண்டனர். படம்: ம.பிரபு
இந்த வழக்கு தொடர்பாக, 12-ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், சீமான் நேற்று போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் சங்கர் தலைமையில் 6 பேர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பின்னர் வழக்கறிஞர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சில காரணங்கள் காரணமாக சீமான் நேரில் ஆஜராக முடியவில்லை. இது தொடர்பாக சீமான் கொடுத்த 2 விளக்க கடிதம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து உள்ளோம். நடிகை விஜயலட்சுமி 2011-ல் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சமாதானமாகச் செல்வதாகக் கூறியதையடுத்து இந்த வழக்கு ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்று கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாராக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

