கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

131 0

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (12)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இன்று மக்கள் வாழ்வதற்கான போராட்டதை முன்னெடுத்துள்ளனர். சுகாதாரத்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கான காரணங்களை நாம் பாராளுமன்றத்தில் முன்வைத்தோம்.

நாட்டு மக்கள் புதிய ஆட்சியையே எதிர்பார்க்கின்றனர். கடந்த அரசாங்கம் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்ததாக சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன.

சூழ்ச்சியினாலையே கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக சர்வதேசம் இன்று கூறுகின்றது. நாட்டின் புலனாய்வு பிரதானிக்கு முறைபாடுகள் குற்றங்கள் எழுந்துள்ளன. எனவே நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை, நாட்டிற்கு பொறுப்பான நிர்வாகம் தேவை.

இந்த ஆட்சியை பொறுப்பேற்க சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. ஏனைய கட்சிகள் தேர்தல் தொகுதிக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது மாத்திரமே.

நாம் நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் தொகுதிக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டோம். கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினையும் கிராமத்திற்கு கிராமம் செல்லும் புதிய வேலைத்திட்டத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

அன்றைய தினங்களில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் மாவட்டத்திற்குச் சென்று புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல், வாக்காளர் பிரிவு கிளைகள், மகளிர் பிரிவுகள், இளைஞர் பிரவுகள், பிக்குகள் முன்னணியின் பிரிவுகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை அன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த அடுத்த மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவோம்.

நாட்டை கட்டியெழுப்புவதே ஐக்கிய மக்கள் சக்தியின் குறிக்கோள். அந்த இலக்கை வெல்வதற்கான பிரச்சாரம் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்கக் கூடிய எந்தவொரு தரப்பும் ஆளும் தரப்பில் இல்லை.

பொதுஜன பெரமுனவுக்கு கிராமத்துக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்து பேசுவதில் அர்த்தமில்லை.

மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரமான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி நினைக்கும் போதே அவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது.

அடுத்த வருடம் தேர்தலுக்கான வருடமாகும். எந்நேரத்திலும் தேர்தலை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.