டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பழனிசாமி, அன்புமணி வலியுறுத்தல்

155 0

தமிழகத்தில் டெங்கு பரவலைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: சென்னை மதுரவாயலை சேர்ந்த அய்யனார் – சோனியா தம்பதியினரின் 4 வயது மகன் ரக்‌ஷன், டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டர் பதிவில், ‘டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரக்‌ஷன் என்ற 4 வயது சிறுவன் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சிறுவன் உயிரிழந்ததற்கு மாநகராட்சி சுகாதாரத்துறையின் அலட்சியம்தான் காரணம். இனியும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல, ரத்த அணுக்கள் குறையும்போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.