கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை நம்பராக்கவே நீதிபதிகளின் ஒப்புதலுக்காக நாள் கணக்கில் தவம் கிடக்க வேண்டிய சூழலுக்கு வழக்கறிஞர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியின் விருப்பப்படி தமிழகத்தில் ‘பேப்பர்-லெஸ் இ-கோர்ட்’ முறையை விரைவில் முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ‘பேப்பர்-லெஸ் டிஜிட்டல் இ-கோர்ட்டுகளாக’ மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு, இப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 60 லட்சம் வழக்கு ஆவணங்களுக்கான 24 கோடி பக்கங்களை, ரூ.1 கோடி செலவில் 3 ஆண்டுகளில் ஸ்கேன் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக தினமும் 2 லட்சம் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது வரை 1 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் எம்.ஆர்.ராதா வழக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு போன்ற பல்வேறு முக்கிய வழக்கு ஆவணங்களும் அடங்கும்.
இதேபோல, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கு ஆவணங்களுக்கு உரிய 55.15 கோடி பக்கங்களை ஸ்கேன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், பெரும்பாலான நீதிமன்றங்களில் வழக்குகளை நம்பராக்குவதற்கே நீதிபதிகளின் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் தவம் கிடக்கும் சூழல் உள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 1,266 கீழமை நீதிமன்றங்களில், 250 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, 5,000 நீதித் துறை பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் தமிழகத்தில் 13 லட்சம் வழக்குகளும், புதுச்சேரியில் 32 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதுகுறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.எஸ்.பார்த்தசாரதி கூறும்போது, “தற்போது வழக்குகளை நேரடியாக ஃபைல் செய்வதை தவிர்த்து, ‘இ-பைலிங்’ மூலமாக ஆன்லைனில் தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். பொதுவாக இ-கோர்ட் நடைமுறையை வரவேற்பது காலத்தின் கட்டாயம்.
எனினும், இதற்கான முறையான பயிற்சி வழக்கறிஞர்களுக்கும், நீதித் துறை ஊழியர்களுக்கும் அளிக்கப்படவில்லை. இதனால் பல கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் நடைமுறை இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. பழைய முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது, கீழமை நீதிமன்றங்களில் பல்வேறு இடர்பாடுகளை வழக்கறிஞர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இ-கோர்ட் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி.நிக்சன் கூறும்போது, “கடந்த ஓராண்டாக கீழமை நீதிமன்றங்களில் 20 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 1,000 வழக்குகளும் இ-ஃபைலிங் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் இ-கோர்ட் மற்றும் இ-ஃபைலிங் முறை அனைத்து நீதிமன்றங்களிலும் அமல்படுத்தப்பட்டால், பக்கம், பக்கமாக வழக்கு ஆவணங்களை டைப் செய்து, இன்டெக்ஸ், வக்காலத்து நாமா, கோர்ட் பீஸ் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, நீதிமன்றத்தில் அவசர கதியில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பொருள் விரயம் மட்டுமின்றி, காலவிரயமும் தவிர்க்கப்படும்.
அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவேற்றினால், நீதிமன்றப் பணியாளர்கள் அவற்றை சரிபார்த்து, நம்பர் இட்டு, வழக்கை உடனடியாக கோப்புக்கு எடுத்து விடுவர். அதில் ஏதாவது திருத்தம் இருந்தால், திருப்பி அனுப்புவர். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், வழக்கு ஆவணங்களின் நிலை என்ன என்பதை வழக்கறிஞர்கள், வழக்காடிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். வழக்குகளை நம்பராக்கவே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வழக்கறிஞர்களின் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மேலோங்கும்.
எனவே, மெதுவாக நடைபெற்று வரும் இப்பணிகளை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தனிக் கவனம் செலுத்தி துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவை: தமிழகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வுகாண வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், புறநகர் பகுதிகளில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகளுக்கு நம்பர் கொடுப்பதிலும்கூட தேவையற்ற காலதாமதம் செய்வதால், இளம் பெண்கள் பலரின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகி விடுகிறது. இதுபோன்ற வழக்குகளால் அவர்கள் வெளிநாடு செல்வது போன்றவற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

