நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் முயற்சி

125 0

புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரை தாக்கி, நிறைவேற்று பாராளுமன்றம், நீதித்துறையை அழிக்க அனுமதிக்க முடியாது. நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் சிலர் சில யோசனைகளை உருவாக்கி வருகின்றனர்.

இது மிகவும் ஆபத்தான நிலை. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம், சனல் 4 விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவதற்கு மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும் வகையில் சிலர் சில யோசனைகளை உருவாக்கி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான நிலை. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத    தாக்குதலை எந்த அரசியல் கட்சியோ அல்லது நபரோ அங்கீகரிப்பதாக நான் நினைக்கவில்லை.

பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை மறைக்க தற்போதைய ஜனாதிபதி முயற்சிப்பதாக சிலர் குற்றஞ்சாட்ட முயற்சிக்கின்றனர்.

பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு கூட தற்போதைய ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்பது முழு நாடும் அறிந்ததே. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்தார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அதைப் பற்றி விசாரிக்க பாராளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

எனக்கு தெரிந்தவரை இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கர்தினாலின்  வேண்டுகோளின்படி அந்த அறிக்கையை வழங்குமாறு தூதுவர் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவும். அதே போன்று மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

எப்.பி.ஐ.யை விட சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்றால் அது எப்படி செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பேச வேண்டும்.

இது தொடர்பில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அந்த சந்தேகத்தை நீக்க வேண்டும். அதற்கான பின்னணியை அமைக்க வேண்டும்.

இல்லையெனில் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு படைகளை நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையால் தாக்கி அழிக்க முடியாது. அப்படி நடந்தால் நாட்டின் கதி என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.