சீனக்கப்பல் கொழும்புக்கு வரும்! திருமலை இந்தியாவுக்குப் போகும்! இனவாதம் மதவாதமாக மாறும்!

160 0

இந்தியா திருமலையை பெற்றுக் கொள்கிறது. சீனக்கப்பல் தடைகளைத் தாண்டி கொழும்புக்குச் செல்கிறது. தமிழர் மீதான இனவாதம் மதவாதமாக மாற்றப்படுகிறது. பார்க்கப் போனால் அவரவருக்கு அவரவர் பிரச்சனை. தமிழர் பிரச்சனை புதுப்புது வடிவமெடுத்து நீள்கிறது. பேச்சு எப்போதும் பல்லக்குத்தான்.  

கடந்த வாரம் எழுதிய பத்தியில், 1977ம் ஆண்டு புதிய அரசியலமைப்பின் கீழான முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி இடம்பெற்றது என்று எழுதியிருந்தேன். இது தொடர்பாக வடஅமெரிக்க நகரம் ஒன்றில் வாழும் நீண்டகால வாசக நண்பர் ஒருவர் எழுப்பிய சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு. அதனை முதல் தெரிவித்துவிட்டு அடுத்த சமாசாரத்துக்கு வருவோம்.

1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதலில் பிரதமராகப் பதவியேற்றார். இது அரசியல் சட்ட முறைமைக்கு உட்பட்டது.

1972ல் சிறீமாவோ பண்டாரநாயக்க அரசு உருவாக்கிய அரசியலமைப்பில் தமக்குத் தேவையான திருத்தம் ஒன்றை, தமக்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைப் பயன்படுத்தி ஜே.ஆர். நிறைவேற்றினார். இத்திருத்தம், அது நிறைவேற்றப்பட்ட வேளையில் பிரதமராக இருப்பவரை நேரடியாக ஜனாதிபதிப் பதவிக்கு மாற்றுவதென்பது. இதன் பிரகாரம் தம்மைத்தாமே ஜனாதிபதியாக மாற்றிக்கொண்ட ஜே.ஆர் 1978 பெப்ரவரி 4ம் திகதி காலிமுகத்திடலில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஆக, முதலாவது தடவை இவர் ஜனாதிபதியானது தேர்தல் மூலமாகவல்ல. அரசியல் சட்டத்தை மாற்றி தம்மைத் தாமே இவர் ஜனாதிபதியாக்கிக் கொண்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. 1978 செப்டம்பர் மாதம் 7ம் திகதி –  சிறீமாவோவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்புக்கு மாற்றீடாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தம்மை உயர்த்திக் கொண்டார். இவ்வாறு முழு அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆட்சியாளரை ஏகாதிபதி (Autocrat)  என்பர்.

ஜனாதிபதிப் பதவியை ஏகாதிபதிப் பதவியாக்கிய ஜே.ஆர். அரசமைப்பு ரீதியாக அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் அமைந்திருந்த நாடாளுமன்ற வளாகத்தில் கோட்டே ஜெயவர்த்தனபுரவுக்கு மாற்றினார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு போட்டியாளராக இருக்கக்கூடியவரென எண்ணிய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைவி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை ஆறு ஆண்டுகளுக்கு ரத்துச் செய்தார். இதன் மூலம் 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டார்.

ஜனாதிபதிப் பதவி வகிக்கும் அவரது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் முடிவின் பின்னர், அவர் விரும்பும் எந்த வேளையிலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் வகையில் தாம் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

1977 பொதுத்தேர்தலின் பின்னரான அடுத்த தேர்தல் 1983ல் இடம்பெற வேண்டியது. சர்வஜன வாக்கெடுப்பின் வழியாக அத்தேர்தலை 1989 வரை நீடிக்கச் செய்து அதிகாரத்தைப் பெற்றார். இத்துடன் நிறுத்தாது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எம்.பி.க்கள் எவரும் தேர்தல்களில் பங்குபற்றுவதைத் தடுப்பதற்கான ஆறாம் திருத்தத்தை நிறைவேற்றினார். இதன் பிரகாரம் பிரிவினை கோரும் எவரும் தேர்தல்களில் பங்குபற்ற முடியாது போனது. (கிழட்டு நரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் பெறாமகனான குள்ளநரி என அழைக்கப்படும் ரணில் மேற்சொன்னவைகளில் எவைகளை கடைப்பிடிக்கும் எண்ணவோட்டத்தில் இருக்கிறாரோ தெரியாது).

ஜே.ஆரினால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் கீழான ஜனாதிபதித் தேர்தல் 1982ம் ஆண்டு அக்டோபர் 20ம் திகதியே இடம்பெற்றது. 1978ல் அவர் ஜனாதிபதியானது தேர்தல் வழியாக அல்ல. அரசியல் சட்டத் திருத்தம் வழியாக குயுக்தி முறையில் தம்மைத் தாமே ஜனாதிபதியாக்கிக் கொண்டார்.

இவ்வாறு அவர் விரும்பிய அனைத்தையும் சட்டமாக்கவும், சட்டத்திருத்தங்களை அமோக வாக்குகளால் நிறைவேற்றவும் அவருக்கு அனுகூலமாக அமைந்தது, அவருக்குக் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையே.

இனி, சமகால சமாசாரங்களில் முக்கியமானவற்றை நோக்கலாம். இலங்கையில் பல தசாப்தங்களாக தலைவிரித்தாடி வரும் இனவாதத்துக்கு ஜோடியாக மதவாதம் எவ்வளவு கச்சிதமாக மேலெழுப்பப்படுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கும் நிலைக்கு ஈழத்தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள், அவை அமைந்திருக்கும் நிலங்கள், அதனைச் சுற்றியிருக்கும் காணிகள், அப்பிரதேசங்களை அண்மித்திருக்கும் தனியார் காணிகள் என்பவற்றை தொல்பொருள் திணைக்களம் எந்த ஆதாரமும் இன்றி, ஆவண நிரூபணமும் இன்றி கையகப்படுத்தி வருகின்றது. நீதித்துறையும், சட்டம் – ஒழுங்குத்துறையும் தொல்பொருள் திணைக்களத்தால் ஓரங்கட்டப்படுகின்றன.

அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள தொல்பொருள் திணைக்களம் தனி அரசாங்கமாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமீறல்களுக்கான நீதிக்குட்பட்ட உத்தரவை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி தமிழர் என்பதால் அவரை நோக்கி அம்புகள் வீசப்படுகின்றன. நாடாளுமன்ற பேச்சுரிமையை பயன்படுத்தும் சரத் வீரசேகர, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் சிங்கள பௌத்தர்களை உசுப்பேற்றும் முனைப்பில் செயற்படுகின்றனர். சபாநாயகரோ, நீதியமைச்சரோ எதனையும் தடுக்காது வாய் பொத்திச் சேவகம் செய்கின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணப்போவதாக தினம் தினம் மந்திர உச்சாடனம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மகாநாயக்கர்களைச் சந்தித்து ஆசி பெறும்போது பௌத்தத்துக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று கூறி தமது சுயரூபத்தைக் காட்டுகிறார்.

பிரச்சனைக்குரிய குருந்தூர்மலைப் பகுதிக்கு வேற்றிடத்தவர்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் மகாநாயக்கர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். ஆனால், திருமலையில் ஆளுனருக்கு எதிராக பௌத்த பிக்குகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு நாட்டின் எப்பகுதியிலிருந்தும் எவரும் செல்வதற்கு அனுமதியுண்டு. வருங்காலத்தில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்த விரும்பும் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை காப்பாற்ற தமிழர்கள் அங்கு செல்வதை தடுப்பதற்கான முன்னேற்பாடாகவே ரணிலின் வேற்றிடத்தவர் செல்வது தடுக்கப்படுமென்பது தெரிவிக்கும் உண்மை.

வழிபாட்டுத் தலங்கள் எங்கிருந்தாலும் அவ்விடத்துக்குச் செல்லவும், அந்த இடத்தைப் பாதுகாக்கவும் அது சார்பு மக்களுக்கு உரிமையுண்டு. பேச்சுரிமை, கருத்துரைக்கும் உரிமை, வசிப்பிட உரிமை, வழிபாட்டுரிமை, ஒன்றுகூடும் உரிமை என்பவை ஒவ்வொரு மனிதருக்குமான பிறப்புரிமைகளில் அடங்கும். சிங்கள பௌத்தர்கள் தமிழர் தாயக பூமியில் எங்கும் சென்று வழிபாடு என்ற பெயரில் அரசங்கன்றுகளையும், புத்தர் சிலைகளையும் நாட்டும் உரிமையைப் பெற்றுள்ளனர். ஆனால், தமிழர் தங்கள் சொந்த மண்ணில் தங்களுக்கேயுரித்தான வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவோ பாதுகாக்கவோ முடியாத நிலை உள்ளதென்றால்…. இப்படித்தான் தமிழர் பிரச்சனைக்கு ரணில் தீர்வு காணப் போகின்றாரோ என்ற கேள்வி எழுகின்றது.

தமிழரின் வழிபாட்டு உரிமை மறுப்புக்கு எதிரான, தமிழரின் சொந்தக் காணிகளில், விகாரைகள் கட்டுவதற்கு எதிரான போராட்டங்கள் சாத்வீகமாகவே இடம்பெறுகின்றன. எங்கும் வன்முறை எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இதனை முன்னிறுத்தி தமிழருக்கெதிரான வன்செயல்களை அல்லது இனரீதியான தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான சில முன்னெடுப்புகளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே மேற்கொள்கின்றனர்.

இதற்கு உதாரணமாக விமல் வீரவன்சவின் பகிரங்க உரையினை பார்க்க முடிகிறது. ‘சிங்களவர்கள் தங்களின் தலைநகரான கொழும்பை இழந்துள்ளபோதும் இங்கு இந்து ஆலயங்கள் மீதோ, அங்குள்ள தேர்கள் மீதோ தாக்குதல் நடத்த நினைக்கவில்லை” என்று விசவாயு போன்ற கருத்தை கக்கியுள்ளார்.

‘சிங்களவர்களே! இந்து ஆலயங்கள் மீதும், தேர்கள் மீதும் தாக்குதல் நடத்தாது எதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்ற மறைபொருளில் இவரது உரை அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

1958ல் பாணந்துறையில் இந்துமத குரு ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்டதையும், 1977ல் இரத்தினபுரியில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டதையும், 1983ல் கொழும்பு ஆலயங்களின் அர்ச்சகர்கள் குடும்பம் குடும்பமாக அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்ததையும் விமல் வீரவன்சவின் உரை நினைவுபடுத்துகிறது. 1987 இலங்கை – இந்திய ஒப்பந்த காலத்தில் இவர் அங்கம் வகித்த ஜே.வி.வி. மேற்கொண்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே என்பதை நினைக்க வைக்கிறது இவரது உரை.

இவரதும் இவர் போன்றவர்களதும் இன மத எதிர்ப்புச் செயற்பாடுகளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேறு கண்கொண்டு பார்ப்பது தெரிகிறது. ஷஇந்துக்கள் பௌத்தர்கள் மோதலை உருவாக்கி இந்தியா இலங்கை அரசுக்கு வழங்கும் ஆதரவை தடுக்கும் நோக்கம் கொண்டது| என்று கூறுகிறார் பிரசன்ன ரணதுங்க.

இந்தியப் பிரதமர் மோடி இந்துவாக இருப்பதால் மதரீதியான மோதலை உருவாக்கலாமென்பது பிரசன்ன ரணதுங்கவின் பார்வை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கருவான 13வது திருத்தத்தையே 35 வருடங்கள் தாண்டியும் முழுமையாக செயற்படுத்த முடியாத நிலையிலுள்ள இந்தியா அந்த ஒப்பந்தத்தை மையப்படுத்தி தனது காரியங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தியா திருமலையை பெற்றுக் கொள்கிறது. சீனக்கப்பல் தடைகளைத் தாண்டி கொழும்புக்குச் செல்கிறது. தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு மதப்பிரச்சனையாக மாற்றப்படுகிறது. பார்க்கப் போனால் அவரவருக்கு அவரவர் பிரச்சனை. தமிழர் பிரச்சனை புதுப்புது வடிவமெடுத்து நீள்கிறது. பேச்சு எப்போதும் பல்லக்குத்தான்.

பனங்காட்டான்