இலுப்­பைக்­குளம் விகாரை விவ­காரம் : இன முறு­க­லுக்கு வித்­தி­டக்­கூ­டாது

137 0
வடக்கு, கிழக்கில்  தமி­ழர்­களின் இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைத்து அவர்­க­ளது தாய­கக்­கோ­ரிக்­கையை சிதை­வு­றச்­செய்­வற்­கான திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக  அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றன.  தொல்­பொருள் என்ற பேரிலும்  வன­,வ­ள­பா­து­காப்பு   என்ற ரீதி­யிலும் தமிழ் மக்­களின்  பூர்­வீகக் காணி­களை  சுவீ­க­ரிக்கும் திட்­டங்கள்  இடம்­பெற்று வரு­வ­துடன் அங்கு பெளத்த சிங்­கள பேரி­ன­வாத  செயற்­பாட்டை அரங்­கேற்றும் வகையில் பெளத்த விகா­ரை­களை அமைக்கும் நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

முல்­லைத்­தீவு தண்­ணீ­ரூற்று குருந்­தூர்­மலை பகு­தியில் ஆதி­சிவன் ஐயனார் ஆலயம் இருந்த பகுதி தொல்­பொருள் முக்­கி­யத்­து­மிக்க இட­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு திட்­ட­மிட்­ட­வ­கையில் சட்­ட­வி­ரோ­த­மாக விகாரை அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி   அங்கு விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன்   அந்­தப்­ப­கு­தி­யினை  முழு­மை­யாக சுவீ­க­ரிக்கும் நட­வ­டிக்கைகளும்  எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  தமிழ் மக்கள் அங்கு சென்று பொங்கல் பொங்­கு­வ­தற்கு கூட படா­த­பாடு பட­வேண்­டிய நிலைமை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

வவு­னியா வெடுக்­கு­நா­றி­மலைப் பகுதி தொல்­பொருள் பிர­தேசம் என்ற பேரில் சுவீ­க­ரிக்­கப்­பட்டு அங்கும் பெளத்­தத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.  இதே­போன்று வடக்கில் பல்­வேறு இடங்­க­ளிலும்  பெளத்த விகா­ரை­களை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதே­போன்றே கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை,  இலுப்­பைக்­குளம்  பகு­தியில்  விகா­ரை  அமைப்­ப­தற்கு  தற்­போது  முயற்சி எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த விகாரை நிர்­மா­ணிக்கும் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான்  நட­வ­டிக்கை எடுத்­த­தை­ய­டுத்து தற்­போது அவ­ருக்கு எதி­ராக பெளத்த பிக்­குகள் போராட்­டங்­களை நடத்­தி­ வ­ரு­கின்­றனர்.

கடந்த 11ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இலுப்­பைக்­குள பிர­தான  வீதியில்  அமைந்­துள்ள காணியில் விகாரை அமைப்­ப­தற்­கான துப்­பு­ரவு பணி இடம்­பெற்­றி­ருந்­தது. வில்கம் விகாரை விகா­ர­தி­ப­தி­யினால் இதற்­கான நட­வ­டிக்கை  எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.  ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சிரேஷ்ட தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­ட­மா­னுக்கு முறை­பாடு செய்­த­துடன் அர­சாங்க உயர் மட்­டத்­தி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

சிங்­கள மக்கள் வாழாத இலுப்­பை­குளம் பகு­தியில் விகாரை அமைக்கும் நட­வ­டிக்கை  இனங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை  ஏற்­ப­டுத்தும்   என்றும் அவர்  சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.  இத­னை­ய­டுத்து  விகாரை அமைக்கும் செயற்­பாட்­டுக்கு திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழ­லுக்­கு­மான  பிர­தேச செய­லா­ள­ரினால்  தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆளுநர்  செந்தில் தொண்­ட­மானின் உத்­த­ர­வுக்கு அமை­யவே  இந்த தடை  விதிக்­கப்­பட்­டது.

விகாரை அமைப்­ப­தற்கு  தடை விதிக்­கப்­பட்­டதை கண்­டித்து  மறுநாள்12ஆம் திகதி பெளத்த பிக்­குகள் ஆர்ப்­பாட்­டத்­தினை  மேற்­கொண்­டி­ருந்­தனர்.  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் மற்றும்  தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சிரேஷ்ட தலைவர் இரா. சம்­பந்தன் ஆகி­யோரின் செயற்­பாட்டை கண்­டித்து இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்த பெளத்த பிக்­குகள்  நாங்கள் தொல்­லியல் காணிக்குள் விகாரை அமைக்­க­வில்லை.அதற்கு அண்­மை­யி­லுள்ள  புத்­த­சா­சன அமைச்­சினால் பெளத்த விகா­ரைக்­காக வழங்­கி­யுள்ள  காணி­யில்தான் விகா­ரையை அமைக்­கப்­போ­கிறோம். இதனால் எவ­ருக்கும்  பிரச்­சினை இருக்கப் போவ­தில்லை என்று  தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்த நிலை­யில்தான் கடந்த 25ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  திரு­கோ­ண­மலை  மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்டம் செய­ல­கத்தில்  நடை­பெ­ற­வி­ருந்த நிலையில்  செய­ல­கத்­துக்கு முன்­பாக பெளத்த பிக்­குகள்  ஆர்ப்­பாட்­டத்­தினை  மேற்­கொண்­டனர்.  இலுப்­பைக்­கு­ளத்தில்   விகாரை  அமைப்­ப­தற்கு அனு­மதி வழங்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுத்தே இந்தப் போராட்டம்  இடம்­பெற்­றி­ருந்­தது.  இவ்­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்ட பெளத்த பிக்­குகள் சிலரை அழைத்து  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான்  கலந்­து­ரை­யா­டி­ய­துடன்   விகா­ரையை அமைப்­ப­தற்­கான அனு­ம­தியை வழங்க முடி­யா­மைக்­கான கார­ணங்­களையும்   விளக்­கி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து செய­ல­கத்தில் திரு­கோ­ண­மலை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக்­கூட்டம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த போது  அதற்குள்  அத்­து­மீறி பிர­வே­சித்த பெளத்த பிக்­குகள் குழப்பம் விளை­வித்­த­துடன் கூட்­டத்தை  நடத்­து­வ­தற்கு   அனு­ம­திக்­க­வில்லை.   இதனால் பெரும் குழப்­ப­மான நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

இந்த விவ­காரம் தொடர்பில்  இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின்  சிரேஷ்ட தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு  இரண்டு கடி­தங்­களை  அனுப்­பி­வைத்­தி­ருக்­கின்றார்.  முத­லா­வது கடி­தத்தில்  சிங்­கள மக்கள் வாழாத  இலுப்­பைக்­குளம் பகு­தியில் விகாரை அமைப்­ப­தனால்  ஏற்­ப­டக்­கூ­டிய இன­மு­றுகல்  நிலைமை தொடர்பில்  விளக்கி கூறி­யி­ருக்­கின்றார். அதே­போன்றே   சில தினங்­க­ளுக்கு முன்னர் அனுப்பி வைத்­துள்ள இரண்­டா­வது கடி­தத்­திலும் அவர் பல்­வேறு விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இலுப்­பைக்­குளம் விகாரை விவ­கா­ரத்தால் எதிர்­கா­லத்தில் முரண்­பா­டுகள் தோற்றம் பெறாது இருக்கும் வகையில் உரிய நட­வ­டிக்­கைளை எடுக்­க­வேண்டும் என்று  ஜனா­தி­ப­தி­யிடம்   சம்­பந்தன்  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  விகாரை விவ­கா­ரத்தால்  திரு­கோ­ண­மலை பிராந்­தி­யத்தில் விரும்­பத்­த­காத விளை­வுகள்  ஏற்­ப­டு­வது மாத்­தி­ர­மல்­லாமல்  நாட்டின் விரை­வான  அபி­வி­ருத்­திக்கு   இந்த விடயம் தடை­யாக இருக்கும் என   கவ­லை­ய­டை­கிறேன்.

நான் எந்­த­வொரு மதத்­துக்கும்  எதி­ரா­ன­வ­னல்ல. ஆனால்  தற்­போது காணப்­படும் நிலைமை  தொட­ரு­மாக இருந்தால் ஏற்­க­னவே தங்­களால் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்கும்  பொரு­ளா­தார முத­லீ­டு­க­ளுக்கும்  இடையூறு ஏற்­ப­டலாம் என்றும்  சம்­பந்தன் இந்­தக்­க­டி­தத்தில் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு  விகாரை அமைப்­ப­தற்­கான முயற்­சிகள்  தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில்  இந்த விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கும்  கொண்­டு ­வ­ரப்­பட்­டி­ருந்­தது.  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்த­ன­தேரர்  இந்த விகாரை விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் புத்­த­சா­சனம் மற்றும் மத­வி­வ­கா­ரங்கள் அமைச்­ச­ரிடம்  கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதன்­போது திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நக­ரங்கள் மற்றும் பட்­டி­னங்கள் பிர­தேச செய­ல­கப்­பி­ரிவு பகுதி தொல்­பொருள் மர­பு­ரி­மைக்கு சொந்­த­மா­னது. ஆறு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப்­ப­கு­தியில்   விகாரை ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு 60 பேர்ச்சஸ் காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  அதற்­கான ஆவ­ணங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. வில்கம் விகாரை விகா­ர­ாதி­பதி  சீல­வன்ச திஸ்ஸ தேர­ருக்கு இந்த காணி வழங்­கப்­பட்­டுள்­ளது.  இந்த காணியை தூய்­மைப்­ப­டுத்தி  அங்கு வசிப்­ப­தற்கு தேரர் சென்­ற­போது  அதற்கு  கிழக்கு  மாகாண ஆளுநர் செந்தில் தொண்­ட­மான தடை விதிக்­கு­மாறு   நகர மற்றும் பட்­ட­ணங்கள் பிர­தேச  செய­லா­ள­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வாறு தடை  உத்­த­ரவு விதிக்க மாகாண ஆளு­ந­ருக்கும்  பிர­தேச செய­லா­ள­ருக்கும்  அதி­கா­ர­முள்­ளதா? என்று  அத்துரலியே ரத்தன தேரர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளித்­தி­ருந்த புத்­த­சா­சன மற்றும் மத விவ­கா­ரங்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க  பெர­லு­கந்த விகாரை  புத்­த­சா­சன திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.  ஆகவே  அங்கு விகா­ர­தி­பதி செல்­வ­தற்கு எந்த தடை­யு­மில்லை. அதனை தடுப்­ப­தற்கு  மாகாண ஆளு­ந­ருக்கு  அதி­கா­ர­மில்லை என்று தெரி­வித்­தி­ருந்தார்.

இதி­லி­ருந்து  இலுப்­பைக்­குளம் பகு­தியில் விகாரை அமைப்­ப­தற்கு புத்­த­சா­சன அமைச்­சா­னது  காணியை வழங்­கி­யுள்­ளமை   நிரூ­ப­ண­மா­கின்­றது.  அந்­தக்­கா­ணிக்­குள்தான்  விகாரை அமைப்­ப­தற்கு  தற்­போது பிக்­குகள்  முயன்று வரு­கின்­றனர்.  ஆனாலும்   இன முறுகல்  ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் அந்த விகாரை அமைப்­ப­தற்கு  தடை விதித்திருக்கின்றார்.

ஆனாலும் இதற்கான தடை விதிப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று பெளத்த சாசன அமைச்சர் பாராளுமன்றத்தில்  தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து  வடக்கு, கிழக்கில் பெளத்த விகாரைகளை அமைக்கும் விடயத்தில் மறைமுகமாக பெளத்த சாசன அமைச்சின் ஒத்துழைப்பு கிடைத்து வருகின்றமை புலனாகின்றது.

இத்தகைய நிலையில்தான் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடானது இன நல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாக  அமைந்துள்ளதாக  தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்  சம்பந்தன் பாராட்டியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  கடிதத்தை எழுதியிருக்கின்றார்.

மொத்தத்தில் வடக்கு, கிழக்கில்  பெளத்த, சிங்கள மேலாதிக்கவாதத்தை பரப்பி  தமிழர்களின் இனப்பரம்பலை இல்லாதொழிப்பதற்கான  நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதை திருகோணமலை விகாரை விவகாரம் எடுத்து காட்டுகின்றது.  எனவே இந்த விடயத்தில்  இன முரண்பாடுகளை தவிர்க்கும்  வகையிலான செயற்பாடுகள் அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.