நெதர்லாந்தின் கலாசார, ஊடக விவகார இராஜாங்க செயலாளர் இலங்கை வருகை

196 0

நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடக விவகார இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு தலைமையிலான கலாசார பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நாட்டை வந்தடைந்துள்ளது.

கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 6 கலைப்பொருட்களின் உரித்தை இலங்கைக்குக் கைமாற்றுவதற்கான சட்ட ஆவணத்தில் கையெழுத்திடுவதே இராஜாங்க செயலாளர் குனே உஸ்லுவின் இலங்கைக்கான விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

இலங்கை, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களை உள்ளடக்கிய குழுவினால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சர்வதேச ஆதாரபூர்வ கூட்டு ஆய்வின்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்டர்டமில் அமைந்துள்ள ரிஜ்க்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள தங்கக் கத்தி, துவக்கு உள்ளிட்ட 6 கலைப்பொருட்கள் இலங்கைக்குரியவை என்று கண்டறியப்பட்டது.

அவ்வாறு கண்டறியப்பட்ட கலைப்பொருட்கள் இவ்வாண்டின் இறுதியில் மீண்டும் இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், அப்பொருட்களின் சட்டபூர்வ உரித்தை இலங்கைக்குக் கைமாற்றுவதற்கான ஆவணத்தில் நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடக விவகார இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு நாளை (28) கைச்சாத்திடவுள்ளார். இந்நிகழ்வு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

அதேவேளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ள இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்தின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விலும் குனே உஸ்லு சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.