பண்டாரவளையில் உள்ள விடுதியொன்றில் வைத்து பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டாம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை பண்டாரவளை விடுதி ஒன்றுக்கு வரவழைத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த சந்தேக நபர், விஷம் அருந்தி கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய பண்டாரவளை பொலிஸ் குழுவினர் கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று, சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அதனையடுத்து, இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் பண்டாரவளை பொலிஸ் நிலையத்துக்கு சந்தேக நபர் கொண்டுசெல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய களனி, கொனவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே கைதாகியுள்ளார்.
அவரை விசாரணைகளின் பின்னர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

