ஆற்றில் தவறி வீழ்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

173 0

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று (27) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு வெட்ட சென்று, பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது வோல்ட் ரீம் தோட்டத்துக்கு அருகில் உள்ள ஆற்றில்  கால்களை கழுவுவதற்காக இறங்கியபோது  தவறி விழுந்துள்ளார்.

அவ்வேளை நீரில் மூழ்கியே இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சிலர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் பணியை தொடர்ந்தனர்.

அதனையடுத்து, சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் நீரில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.