நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் 2023.08.21 மதிப்பாய்வுக்கு அமைய 47107 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விளைச்சல் இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பெரும்போக விவசாயத்தின் ஈடுபட வேண்டுமாயின் நட்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருபத்தேழு இரண்டின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் (2023.08.21 மதிப்பாய்வு) அமைய 47107 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.கடும் வரட்சியால் குருநாகல் மாவட்டத்தின் நெற்பயிர்ச்செய்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வரட்சியான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளதால் விவசாய பயிர்ச்செய்கைகளுகளுக்கு ஏற்படும் பாதிப்பை தொடர்ந்து அவதானித்து வருகிறோம்.
2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய நெல் உள்ளிட்ட ஆறு விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விவசாயிகள் தமது விளை நிலங்ககளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அருகில் உள்ள விவசாய சேவைகள் நிலையத்துக்கு அறிவுறுத்தி விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பான மதிப்பாய்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா போதுமானதல்ல, நானும் நெற்பயிர்ச்செய்கை செய்தேன்.வரட்சியான காலநிலையால் எனது 3 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு குறைந்தப்பட்சம் ஒன்றரை இலட்சம் செலவாகியுள்ளது.அவ்வாறான நிலையில் 40 ஆயிரம் ரூபா போதுமானதாகுமா ? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு எழுந்து பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபா போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய இந்த தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய நட்டஈட்டுத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன்.
நட்டஈடு தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நட்டஈட்டுத்தொகை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி இறக்குமதி செய்வதற்கான தேவை கிடையாது.சிறுபோக விவசாயத்தில் போதுமான நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆகவே அரிசி இறக்குமதி செய்வது அத்தியாவசியமற்றது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதுமான நட்டஈட்டை வழங்காவிட்டால் அவர்கள் பெரும்போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள். அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.ஆகவே விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றார்.

