இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஜோர்ஜ் ஹம்போல் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் திங்கட்கிழமை (21) நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையில் நீண்டகாலத்தில் இருந்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் வலுப்பெறச்செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதார அரசியல் நிலைமை மற்றும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறி இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்பதுடன் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் மத கலாசார மற்றும் அரசியல் தொடர்புகளை மேலும் முன்னேற்றுவதாக தாய்லாந்து தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாய்லாந்தின் தேர்தல் முறைமை தொடர்பில் தூதுவரிடம் நீதி அமைச்சர் தகவல் கேட்டதற்கு, அது தொடர்பில் நீண்ட தெளிவொன்று தூதுவரினால் வழங்கப்பட்டது.
தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த முதுராஜா யானை தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்துகொண்டார். முதுராஜா யானை சிறந்த ஆராேக்கியத்துடன் இருப்பதாக தூதுவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
மேலும் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் காணாமல் போனோகள் தொடர்பாக ஆராயும் காரியாலயம் மற்றும் இழப்பீட்டுக்கான காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்க இருப்பதாகவும் இதன்போது அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தாய்லாந்து தூதுவருக்கு விளக்கப்படுத்தியதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

