நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களை தக்கவைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

160 0

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களை தக்கவைத்துக்கொள்ள எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தியர்கள்  மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று அந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டை விட்டுச் செல்லாத அதிகளவான வைத்தியர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களை தடுப்பதற்கான தேவை ஏற்படவில்லை.

இங்குள்ள வைத்திய நிபுணர்களை தொடர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு சுகாதார அமைச்சு எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கும். இது தொடர்பில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திர கல்வியில் இலவசமாக மருத்துவ துறையில் கல்வி கற்று வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நாடு இலங்கை என நான் நினைக்கிறேன்.

கிராமப்புறங்களில் உள்ள வித்தியாலயங்கள், மகா வித்தியாலயங்கள், கல்லூரிகளினூடாக பிரவேசித்து மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று பட்டப்படிப்பை நிறைவு செய்யும் அவர்கள் அந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.