13ஐ வைத்து எதிர்க்கட்சிகள் உதைபந்தாட்டம் ஆடக்கூடாது – ஆஷூ மாரசிங்க

45 0

அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் உதைந்தாட்டம் ஆடாமல், நாடாளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு
தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதியின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரதானி ஆஷூ மாரசிங்க
தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘அரசமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் கலந்துரையாடி அதனை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 13 தொடர்பான தனது பிரேரணையை ஜனாதிபதி கடந்த வாரம் நாடாளுமன்றத்துக்கு முன்வைத்திருந்தார். நாடாளுமன்றத்தினால் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு 13ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு கால்பந்தாடி வருகின்றன. 13ஆம் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. இவ்வாறான எதிர்க்கட்சி எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால், நாட்டுக்கு என்ன நடக்கும் என தெரியாது.
மேலும், 13ஆம் திருத்தத்தை பெரிய விடயமாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் மோதலொன்றை ஏற்படுத்தவே எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. நாடு தொடர்பில் உணர்வு இருக்கும் உண்மையான எதிர்க்கட்சி என்றால், 13 தொடர்பாக ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கும்
பிரேரணை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் விவாதித்து, மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். அரசாங்கம் வடக்கில் கைப்பற்றிய காணிகளில் ஒரு பகுதியை அந்த மக்களுக்கு மீண்டும் கையளிக்க முற்படும்போது சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யுத்தம் முடிவடைந்தும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களின் உரிமைகளை அனுபவிக்க இன்னும் முடியாமல் போயிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களை நசுக்கவேண்டுமா என நாங்கள் சமூகத்தில் கேட்கவேண்டும் என ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.