
நீரின் தரம் குறைந்துள்ளதால், குடிநீரை வழங்குவதற்காக நீர் சுத்திகரிப்பு செய்யும் போது நீரின் தரம் தொடர்ந்தும் பரிசோதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த சபையின் பிரதிச் செயலாளர் அனோஜா களுஆராய்ச்சி இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று முதல் 6 மாத காலத்திற்கு 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43வது பிரிவின் கீழ் 6 மாத காலத்திற்கு மாத்திரம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 நிபந்தனைகளின் கீழ் உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி உரிய மின்சாரம் கொள்முதல் தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒப்பந்தக் காலத்தின் முடிவில் மின்சார கொள்வனவு தொடர்பாக சுயாதீன கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அத்துடன், கொத்மலை – பொல்பிட்டிய 220 கிலோவோட் மின்கட்டமைப்பு அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இந்த மின்சாரம் குறைந்த செலவின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பதே குறித்த நிபந்தனைகளாகும்.

