சீனி வரி மோசடி விவகாரம் குறித்து நிதியமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை!

153 0

சீனி வரி மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.

இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சுத் தவறியமை குறித்தும் குழு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ.த சில்வா வருகை தராத நிலையில் அக்குழு பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக ரணவக்க தலைமையில்  கடந்த வாரம்  கூடியபோது இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது. இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து குழுவுக்குத் தெரியப்படுத்துவதாக இங்கு வருகை தந்திருந்த நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை மீளப்பெற்றுக் கொண்டால் நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இங்கு குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கரிசனையைக் குழுவுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் குழு வேண்டுகோள் விடுத்தது.

கோதுமை மா தொடர்பில் இறக்குமதி, ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு முன்னர் அது பற்றிக் குழுவுக்குத் தெரியப்படுத்த நிதி அமைச்சு தவறியமை தொடர்பிலும் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த  21.07.2023ஆம் ஆண்டு அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பாராளுமன்றத்தில் கடந்த 18.07.2023ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 1969ஆம் ஆண்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான 2336-45 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்காக கொள்வனவுச் செயன்முறையை ஆரம்பித்துள்ள நிறுவனங்களுக்கு மாத்திரம் அனுமதிப்பத்திரத்தை வழங்குவது வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இரட்டை ஏகபோகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குழுவின் பதில் தலைவர் தெரிவித்தார். இது விடயத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது.

அத்துடன் 2023 ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் குறித்துக் கலந்துரையாடிய குழு இதற்கு அனுமதி வழங்கியது. இதற்கமைய உட்பிரிவு 2022ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் உட்பிரிவுக்கு அமைய கடன்பெறும் எல்லையின் அளவு 4979 பில்லியனிலிருந்து 13979 பில்லியனாக அதிகரிப்பதன் மூலம் செலவினத்தை 4222.23 பில்லியனிலிருந்து 13222.23 பில்லியனாக அதிகரிப்பதற்கும் திறைசேரி தொழிற்பாடுகள் திணைக்களத்தின் மூலம் 4வது உபபிரிவு திருத்தப்படுகிறது.