உடவளவ விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளேன். சமனல அணையில் இருந்து நீர் விடுவிப்பு விவகாரத்தில் மின்சார சபை பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது. பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் (13) உடவளவ வலய விவசாயிகளுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வறட்சியான காலநிலையால் மாத்திரம் விவசாயத்துறை பாதிக்கப்படவில்லை. நிர்வாக கட்டமைப்பில் எடுக்கப்பட்ட ஒருசில தவறான தீர்மானங்களினாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சமனல அணையில் இருந்து உடவளவ விவசாய நிலங்களுக்கு நீர் விடுவிப்பு தாமதப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள்.
நீர் விடுவிப்பு விவகாரத்தில் மின்சார சபை பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு நான் அமைச்சர் என்ற ரீதியில் தொலைபேசி அழைப்பு எடுத்தும் அவர் அதற்கு பதலளிக்கவில்லை. மின்சார சபையில் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
சமனல அணையில் இருந்து உடவளவ விவசாய நிலங்களுக்கு நீர் விடுவிப்பு தாமதப்படுத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி உரிய தரப்பினரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளார். அறிக்கை கிடைத்தவுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வறட்சி, நீர் விடுவிப்பு தாமதப்படுத்தல் ஆகிய காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள உடவளவ வலய விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவது அத்தியாவசியமானது. ஆகவே விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பிலான யோசனையை ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளேன் என்றார்.

