தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவுகளோடு ஒன்றிணைவோம்.

188 0

Berlin, den, 13.August 2023

அன்பார்ந்த யேர்மனிய வாழ் தமிழீழ மக்களே,

எமது தாயக விடுதலைக்காக ஆயிரமாயிரம் மாவீரர்கள் எமது மண்ணிலே விதைந்தார்கள். அம்மாவீரர்களின் உயிர் கருவாகி, வரலாற்றுத் தாயின் மடியில் உருவம் பெற்று, தமிழீழ தேசமாக வடிவம் பெறும்.

ஆம் உறவுகளே,

தமிழீழ தேசத்தின் உயிராக, உன்னத வடிவமாக தியாக தீபம் திலீபன் அவர்களும் விளங்குகின்றார். உலகின் அமைதிவழிப் போராட்ட வரலாற்றின் உச்சமாக, நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 36ஆம் ஆண்டு நினைவுகள் எமது மனங்களில் ஒளியேற்றி நிற்கின்றது. செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடங்கி 26ஆம் திகதி வரையான பன்னிரு தவத்திரு நாட்களையும் நினைவு கூருவதோடு, யேர்மனிய மக்களுக்கும் இங்கே வாழும் பல்வேறு தேசிய இனமக்களுக்கும் தியாக தீபம் திலீபன் அவர்களது உன்னத தியாகத்தினையும், அவரது இலட்சியக் கனவுகளையும் கொண்டு சேர்ப்பது ஈழத்தமிழராகிய எம் ஒவ்வொருவரது உரிமையும் கடமையும் ஆகும். யேர்மனியின் பல்வேறு நகரமத்திகளில் எம்மால் ஒழுங்குபடுத்தப்படும் நினைவெழுச்சி நிகழ்வுகளிலும், பரப்புரைக் கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் பேரெழுச்சியோடு ஒன்றிணையுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக சிறீலங்கா சிங்கள இனவெறி அரசுகளால், தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பானது இன்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிங்கள இனவெறி அரசினால் ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளாக தீவிரமடைந்துள்ளது. தமிழர்களது பூர்வீகத் தாயகமான தமிழீழப்பகுதிகளின் தொன்மை வாய்ந்த தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள-பெளத்த மயமாக்கலினூடாக நிலப்பறிப்பு ஒருபுறமாகவும், இனக்கலப்பினூடாக திட்டமிட்ட இன அழிப்பு இன்னொருபுறமாகவும் மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதேவேளை என்றுமில்லாதவாறு தமிழர் தாயகப் பகுதியெங்கும் வாழும் இளைய தலைமுறையினரை போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கங்களுக்கு அடிமையாக்கி முற்று முழுதாகச் சீரழித்து,திசைமாற்றும் நடவடிக்கைகளையும் மறைமுகமாக மேற்கொண்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இன அழிப்பினை எதிர்கொண்ட தமிழ்த்தேசிய இனமக்களின் தேசிய இனவிடுதலைப்போராட்டத்திற்கு, உரிமைகள் ஏதுமற்ற, சிங்கள ஒற்றையாட்சி முறைமுக்குள்ளான 13ஆம் திருத்தத்தினை தீர்வாக முன்வைத்து, தமிழர்களது தேசிய அடையாளத்தினை அழிப்பதற்கான சூழ்ச்சி நடவடிக்கைகளிலும் சிங்கள இனவெறி அரசு தீவீரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குப் பிராந்திய வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்த முனையும் இந்திய மத்திய அரசு துணைநிற்பது மிகப்பெரும் அநீதியாகும்.

மீண்டுமொருமுறை தியாகதீபம் திலீபன் அவர்களது அறமும் உன்னத தியாகமும் எம்மை மீட்டெடுக்கும் அறவழி ஆயுதமென்பதனை உணர்ந்தெழுந்து அவரது கனவுகளை நனவாக்க ஒன்றிணைவோம்.

“தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் திலீபன் செய்திருக்கிறான்.
திலீபனின் தியாகம், காந்தியின் அறக்கோட்பாட்டிற்கு ஒரு மகோன்னதமான செயற்பாட்டு வடிவம் கொடுத்தது. ”
-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.