பாக்கு நீரிணையில் பாதுகாப்புக்காக இரு இந்தியக் கப்பல்கள்

277 0

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் எதிரொலியாக, பாதுகாப்பு பணிக்காக இந்திய கடலோர காவல் படையின் இரு ரோந்து கப்பல்கள் பாக்கு நீரிணை விரைந்துள்ளது.

தனுஷ்கோடி அருகே பாக்கு நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மார்ச் 6ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் பிரிட்ஜோ என்ற இளைஞர் பலியானார். இதை கண்டித்து மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இராமேஸ்வரம் மீனவர்களிடம் அந்தநாட்டின் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமாதானம் பேசியதைத் தொடர்ந்து போராட்டம் மீளப் பெறப்பட்டது.

இந்தநிலையில், பாக்கு நீரிணை கடலில் மீன்பிடிக்கும் இராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் ஏதுவாக அப்பகுதிகளில் ரோந்து பணியை இந்திய கடலோர காவல் படை முடுக்கிவிட்டுள்ளது என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்காக இராமேஸ்வரம் அருகே மண்டபம் இந்திய கடலோர காவல் படையின் ´சார்லி-423´, ´சார்லி- 424´ ஆகிய இரு நவீன ரோந்து கப்பல்கள் நேற்று மன்னார் வளைகுடா கடலில் இருந்து பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து பாக்கு நீரிணைப் பகுதிக்கு விரைந்தன.

இதன்மூலம் பாக்கு நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவும், அந்நியர்கள் ஊடுருவலை தடுக்கவும் இந்திய கடலோரக் காவல் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.