தாஜூடின் கொலையாளிகளை கைதுசெய்து, என்னை விடுவியுங்கள் – அனுர

432 0

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (16 ) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ரொக்சி உத்தரவு பிறத்துள்ளார்.

இதேவேளை, பிணை வழங்காமை மூலம் தனது மனித உரிமை மீறப்படுவதாக, அனுர சேனாநாயக்க, குற்றவாளி கூண்டில் இருந்தவாறு கருத்து வெளியிட்டபோது குறிப்பிட்டுள்ளார்.

தன் மீது சாட்சியங்களை மறைக்க முற்பட்டதாகவே குற்றம்சுமத்தப்பட்டுள்ளது எனவும், இவ்வாறான வழக்குகளில் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் சுமார் 10 மாதங்களாக தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனுர நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனக்கு தேவை தாஜூடினின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதே எனவும் சுட்டிக்காட்டிய அவர், எனவே வெகுவிரைவில் விசாரணைகளை நிறைவு செய்து தன்னை விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.