ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல் – 08.08.2023.

1318 0

08.08.2023

யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல்.

அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்கட்கு!

எங்கள் இதய வாசல்கள் திறந்து நிறைவான நன்றிகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

எதிர்வரும் 23.09.2023 (சனிக்கிழமை) அன்று யேர்மனியின் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள “டோட்முண்ட்” (Dortmund) நகரில் நடைபெற ஏற்பாடாகியிருந்த தங்களுடைய பிரமாண்ட இசை நிகழ்வுக்கான காலத்தெரிவு பொருத்தமற்றது என்பதையும், அது தமிழ்த்தேசிய இனவிடுதலைக்கான போராட்டத்தின் அதி உச்சமான அறவழித் தியாக நாயகனாக உலகத்தமிழர் உள்ளங்களிலே வாழ்ந்துகொண்டிருக்கும் மாவீரன் தியாக தீபம். லெப்டினன் கேணல். திலீபன் அவர்களின் முப்பத்தாறாவது (36) ஆண்டின் ஒன்பதாம் (09) நாள் நினைவேந்தல்க் காலமாக அமைவதால், திலீபன் அவர்களது தியாகப் பயணத்தின் ( செப்டெம்பர் 15 – 26 வரை.) நாட்களிலே களியாட்ட நிகழ்வுகளை தவிர்க்குமாறு தங்களிடம் மிக அன்போடும், மதிப்போடும் வேண்டியிருந்தோம்.

எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து, யேர்மனிய தேசத்திலே வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களின் முதன்மைப் பிரதிநிதித்துவ அமைப்பாக இயங்கிவரும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதனைத் தாயமைப்பாக ஏற்றுச் செயலாற்றிவரும் உப கட்டமைப்புகளும் தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் தங்களிடம் தார்மீக உரிமையும், மரியாதையும் கொண்டு அதியுயர் பண்பின் வழியாக கோரி நின்றதையும் அறிவீர்கள்.
எமது கோரிக்கைகளை நியாயபூர்வமாக, குறிப்பாக தியாகதீபம் திலீபன் அவர்களின் உயர்ந்த தியாகத்தை இன்றுவரை பூசித்தும், நீண்டகாலமாக எமது விடுதலைக்காக ஆதரவு நல்கிவரும் தாய்த்தமிழக உணர்வாளர்களும் தமக்கே உரித்தான பண்புகளின் வழிமுறையில், அக்காலத்தைத் தவிர்க்குமாறு தங்களிடம் அன்புகலந்த மரியாதையோடு தொடர்புடையோர் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் கேட்டிருந்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் தங்களுடைய தார்மீக பொறுப்புணர்ந்த கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள்.

யேர்மனிய தேசத்திலிருந்து எம்மால் ஆரம்பிக்கப்பட்டிருந்த உங்களுடைய கவனம் நோக்கிய கோரிக்கையைத் தொடர்ந்து, எமக்கான ஆதரவுக் குரல்களாக பன்னாடுகளிலும் வாழ்ந்துவரும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களும், தமிழ்த்தேசிய இனவிடுதலைக்கான செல்நெறியில் இன்றுவரை தமது உண்மையான வகிபாகத்தை திடமாக கடைப்பிடித்துவரும் சமூக ஊடகங்களும், தங்கள்மீது அன்பும் மரியாதையும் கொண்டு வினயமாக வேண்டி நின்றதையும் நீங்கள் அறிவீர்கள்.

இலட்சிய வேட்கை குன்றாமல், நிலைமாறுகால தகையுணர்ந்து, சனநாயக வழிமுறையில் உலக நீதியின்பால் எமது போராட்ட உண்மைகளை தாங்கிச் சுமப்பதில் பெரும்பங்கு வகிக்கும் தமிழ் இளையோர்களும், தமிழக இளையோர்களுமாக தமது அறிவியல்பூர்வமான அறம் தவறாத உணர்வின் வழிநின்று, தியாக தீபம் திலீபனை நினைவிருத்தி தொடர்ச்சியாக அவர்களுடைய கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக பதிவு செய்திருந்தார்கள்.

மேற்பகுதிகளிலே சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விடயங்களையும் தாங்களும், தங்கள் சார்ந்தோரும், மிக அவதானமாக உற்றுநோக்கி தியாக தீபம் லெப்டினன் கேணல். திலீபன் அவர்களின் நினைவேந்தல் நாட்களின் புனிதத் தன்மையை மதித்து தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக மக்களின் நெஞ்சார்ந்த ஆதங்கத்தினை பரிபூரணமாக ஏற்று, தங்கள்மீது உலகத்தமிழர்கள் வைத்துள்ள நிறைவான அன்பும், மரியாதையும் இரட்டிப்புத் தன்மையுடன் நோக்கும் வகையிலாக, ஏற்பாட்டாளர்கள் சந்தித்த பல்வேறு சிரமங்களையும் தாங்கி, தங்களது இசை நிகழ்ச்சிக்கான காலத்தை எதிர்வரும் 29.09.2023 அன்று (வெள்ளிக்கிழமை) மாற்றியமைத்துள்ளமையை அறிந்து கொள்கின்றோம். தங்களுடைய இசையால் வசமாகும் அத்தனை உறவுகளுக்கும் இந்நாள் உரித்தாகட்டும்.

அகிம்சையின் வடிவமான தியாகதீபம் திலீபன் அவர்களின் ஈகத்தோடு, ஒவ்வொரு மாவீரர்களின் தமிழீழ சுதந்திரமென்ற ஒற்றை இலட்சிய வேட்கையும், ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான இதய தாகமும் எமக்கான விடுதலையைப் பெறும்வரை தணியாது என்பதையும், தமிழ்த்தேசிய இனவிடுதலைக்கான பேராதரவுத் தளத்திலே தாங்களும் ஓர் உயர்வு நிலையில் எப்போதும் நன்றியோடு மதிக்கப்படுவீர்கள் என்பதையும், உலகத் தமிழர் உள்ளத்திலே எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்ட அன்பு மகனாக இருப்பீர்களென்பதையும் யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக மீண்டும் பதிவு செய்வதோடு, தங்கள் இசை நிகழ்ச்சி யேர்மனியிலும் ஏனைய நாடுகளிலும் சிறப்பாக அமைய இதயபூர்வமான நிறைநல் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.