தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக எழுச்சிப் பயணத்தை முன்னெடுத்து வரும் பேரணியினருக்கு ஆசிவேண்டி பொகவந்தலாவை அல்டி மேற்பிரிவு தோட்ட மக்கள் அருள்மிகு ஆற்றங்கரை முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மலையாள கருப்பு ஆலயங்களில் மக்கள் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்களின் இலங்கை வருகையினது 200 வருட பூர்த்தியை நினைவூட்டும் விதமாக மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெறும் நடைபயண நிகழ்வு இன்று (05) ஒன்பதாம் நாளாக தொடர்ந்து வருகிறது.
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் தமது வாழ்வுரிமை உட்பட அடிப்படை உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடும் முயற்சியில் இந்த நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள், தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே இந்த பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று சனிக்கிழமை முழுவதும் மதவாச்சியில் ஓய்வெடுக்கும் மலையக நடைபவனி பேரணியினர் நாளை ஞாயிற்றுக்கிழமை (06) மதவாச்சியிலிருந்து மிகிந்தலை நோக்கி தமது பயணத்தை தொடரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






