ஜேர்மன் நகரமொன்றில், 64 வயது நபர் ஒருவர், ஐந்து பேரை துப்பாக்கியால் சுட்டதில், மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 7.15 மணியளவில், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Augsburg நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், 64 வயது நபர் ஒருவர், 49 மற்றும் 72 வயதுள்ள பெண்கள் இருவரையும், 52 வயது ஆண் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த மூவருமே உயிரிழந்துவிட்டார்கள்.
அவர்களை சுட்டுக் கொன்ற பிறகு, அந்த நபர் அருகிலுள்ள வீடு ஒன்றிற்குச் சென்று, 32 வயதுள்ள பெண் ஒருவரையும், 44 வயது ஆண் ஒருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தகவலறிந்த பொலிசார் அந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அவர்கள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமான அந்த 64 வயது நபர், காரில் ஏறி Langweid என்னும் கிராமத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அவரது காரை பொலிசார் தடுத்து நிறுத்தி, அவரைக் கைது செய்துள்ளார்கள். தன்னைக் கைது செய்வதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லையாம்.
அவர் எதனால் இப்படி ஐந்து பேரை சுட்டார் என்பது தெரியவில்லை. அவர் யார் என்பது தொடர்பான எந்த விவரமும் வெளியிடப்படாத நிலையில், பொலிசார் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

