இலகு ரயில் திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த ஜப்பான் – இலங்கை பேச்சுவார்த்தை

155 0

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று சனிக்கிழமை (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கும் ஆதரவிற்கு இதன்போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொதுவான தளத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் நடைபெற்ற கலந்துரையாடல்  குறித்தும் விளக்கினார்.

மேலும், ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பின் முக்கிய விடயமான இலகு ரயில் திட்டம் (LRT), துறைமுக கிழக்கு முனையம், கண்டி அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான மற்றும் நிலையான பிராந்தியமாக பேணுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், பிராந்திய மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடினர்.

தொழில் சந்தை சார்ந்த பொருளாதாரத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப பொருளாதார மாற்றத்தை எதிர்பார்த்துள்ள இலங்கையின், உயர் தொழில்நுட்ப கைத்தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவூட்டியதோடு அதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க அவசியமான பணிகளை மேற்கொள்வதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவின் சிரேஷ்ட வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் முரகாமி மனபு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அரிமா யுடகா, சர்வதேச ஒத்துழைப்பு பணிப்பாளர் நாயகம் எண்டோ கசுயா, ஜப்பான் வெளியுறவு அமைச்சின் பிரதி ஊடக செயலாளர் ஒகானோ யுகிகோ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, அமைச்சரின் நிறைவேற்று உதவியாளர் டொமோசபுரோ எசாகி, தென்மேற்கு ஆசிய விவகாரப் பிரிவின் பணிப்பாளர் டாரோ ஷுட்சுமி ஆகியோர் உள்ளிட்ட பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.