காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கு போராட்டங்கள் தொடர்கின்றன.

218 0

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டம் இன்று 8வது நாளாகவும் தொடர்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த 8ஆம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமது பிள்ளைகள் காணமல் ஆக்கப்பட்டதாக தெரிவித்தும்; தமது பிள்ளைகள் தொடர்பில் உரிய தீர்வை வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு இராணுவ படைத் தலைமையகம் முன்பாக கேப்பாபுலவு மக்களால் ஆரம்பித்த போராட்டம் இன்று 15வது நாளாகவும் தொடர்கிறது.

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்ககோரி கடந்த முதலாம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிலங்களில் பாடசாலை, கோவில்கள், பொதுநோக்குமண்டபம் உள்ளிட்டவை மற்றும் தமது பொருளாதார வளமும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று பன்னிரெண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 24வது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.