கறுப்பு யூலை நினைவுவாரம்,யேர்மனி.

279 0

கறுப்பு யூலையின் 40 ஆம் ஆண்டு நினைவுகளோடு யேர்மன் தழுவிய ரீதியாக 23 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை கறுப்பு யூலை வாரமாக கவனயீர்ப்புப் போராட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இளையவர்களுக்கான நாளாக ஏற்பாடு செய்யப்பட்டு ,யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினால் இளையோர் விழிப்புணர்வு ஒன்றுகூடல் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் 1983 கறுப்பு யூலை இன அழிப்பு வன்செயல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கும், சிங்கள இனவெறி அரசினால் இதுவரை காலமும் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் பொதுஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சுடர் மற்றும் மலர் வணக்கம் செய்யப்பட்டது.

அகவணக்கத்தினைத் தொடர்ந்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் மற்றும் துணைப்பொறுப்பாளர் இருவரினதும் கறுப்பு யூலை நினைவுவார அறிமுக உரை இடம்பெற்றது.

தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பினால் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட விளக்கக்காட்சிப் படுத்தல் (presentation) நிகழ்த்தப்பட்டது.
தாயகத்திலிருந்து கறுப்பு யூலை நேரடி சாட்சியங்களின் பதிவுகள் காணொளியில் காண்பிக்கப்பட்டதனைத் தொடர்நது இளையவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நிகழ்வானது மிகவும் ஆக்கபூர்வமானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக 2009 இன அழிப்பின் கொடூரத்தை முள்ளிவாய்காலில் நேரில்க் கண்டு, ஏழு வயதில் தாயகத்தினை விட்டு யேர்மனிக்குப் புலம்பெயர்ந்த இளையவர் ஒருவரின் அனுபவப்பகிர்வு வந்திருந்தோரின் மனங்களை உறையவைத்தது. நிகழ்வுகளின் நிறைவாக தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அற்பணித்த மாவீரர்களின் நினைவுகளை ஏந்தி, அவர்களது இலட்சியங்களை நிறைவேற்றத் தொடர்ந்தும் உழைப்போம் என உறுதி எடுத்துக்கொண்ட இளையவர்களது ஒன்றுகூடல், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலோடும் “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” எனும் தாரகமந்திரத்தோடும் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.