பிரிவினை வாதம் குறித்த பேசும் மாகாண சபைகளுக்கு ஆபத்து

230 0

பிரிவினை வாதம் குறித்து ஏதாவது ஒரு மாகாண சபை கருத்து வெளியிடுமானால், அதனை கலைத்து மத்திய அரசுடைமையாக்கும் அத்தியாயம் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைத் தவிர்ந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் அமைப்புக்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.

அரசியல் அமைப்பை உருவாக்குதல் மற்றும் மக்கள் கருத்துக் கணிப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தல் முதலான பொறுப்புக்களை பிரதமர் தம்மிடம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டுடன் ஜனாதிபதி உள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு அனுகூலமாக அமையாத வகையில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் கருத்து என அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

இதேவேளை, பௌத்த மதம் அரச மதமாகவும், ஏனைய மதங்களுக்கு முக்கியத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கான யோசனை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரம் பகிரும் அத்தியாயமும் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.