தேர்தல்கள் ஆணைக்குழுவை பாராளுமன்றத்துக்கு அழைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது

140 0

தேர்தல்கள் ஆணைக்குழுவை பாராளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாய விரோதமானது.

இவ்வாறான முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும். மக்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்து தப்பிச் செல்ல ஜனாதிபதி முயற்சிக்கிறார் என மக்கள்  விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற  சுங்க கட்டளைகள் சட்டம் மீதான விவாதத்தின் போது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு விசேட தெரிவுக்குழு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேர்தல் வரலாறு மிகவும் கரும்புள்ளிகளை கொண்டது. இதனால் சுயாதீன தேர்தல்களுக்காகவே ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம்  தேர்தல் வாக்கெடுப்புக்கான தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அது  தொடர்பான அதிகாரம் உள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஆணைக்குழுவை அழைத்து விசாரிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அத்துடன் அது தேர்தல்கள் ஆணைக்குழு மீது பாராளுமன்றத்தினால் முறையற்ற வகையில் அதிகாரத்தை பயன்படுத்துவதாக அமையும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்ட விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில்  இரண்டு வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை   பாராளுமன்றத்திற்கு அழைப்பது நியாயமற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மக்கள் கருத்துக்கு முகம் கொடுக்க முடியாது தப்பிச் செல்ல முயற்சிக்கின்றார். இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவை பாராளுமன்றத்திற்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.