அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.புகார்டீன் விசனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வருடம் இடம்பெற்ற ஆசிரிய இடமாற்றங்களின் போது எமது கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவுக்கு இரசாயனவியல், பெளதீகவியல் பாட ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைகளுக்குச் சென்று விட்டனர்.
அதற்குப்பதிலாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. கணித பாடத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர் முன்னதாக அரச நிறுவனம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்பட்டவர்.
அவர் பட்டதாரி என்றாலும் கற்பித்தல் செயற்பாடுகளில் எந்தளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது புரியவில்லை. அதே போன்று உயிரியல் பாடத்துக்கு மாத்திரம் ஒரு ஆசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்தர கணிதப்பிரிவின் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து நிரந்தர ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இது குறித்து அட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
குறித்த பாடங்களுக்கு ஆசிரியர்களை இது வரை நியமிக்காமலிருப்பது மாணவர்களையும் கல்லூரி சமூகத்தையும் பழிவாங்கும் செயற்பாடாகும்.
இவ்வருடம் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களும் முதலாம் ஆண்டு மாணவர்களும் வெறுமனே வகுப்பில் அமர்ந்திருக்கின்றனர். பெற்றோர்கள் தமது வேதனைகளை வெளிப்படுத்தி வருவதுடன் எமக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்ந்தால் உயர்தர கணிதப்பிரிவை மூடும் நிலை ஏற்படலாம் என்றே கூற வேண்டியுள்ளது. பல பொறியியலாளர்களையும், வைத்தியர்களையும் உருவாக்கி வரும் எமது கல்லூரியின் நிலைமை குறித்து எவரும் அக்கறையின்றியே செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
இது குறித்து நாம் கல்லூரி அதிபர் ஏ. ரொபர்ட்டிடம் கேள்வி எழுப்பிய போது கணிதப்பிரிவின் இரண்டு பாடங்களில் இரசாயனவியலுக்கு ஒரு ஆசிரியர் இடமாற்றம் பெற்று வந்தாலும் அவர் சுகயீனத்தை காரணங்காட்டி மீண்டும் பழைய பாடசாலைக்கே சென்று விட்டார்.
இது குறித்து நான் வலயக்கல்வி பணிமனைக்கு அறிவித்துள்ளேன். ஏற்கனவே இங்கு கற்பித்த ஆசிரியர்களை இணைப்பு செயற்பாட்டின் மூலம் மீண்டும் இங்கு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

