பிரதான கட்சியின் மே தின கூட்டங்கள்

336 0

நல்லாட்சியின் இரு பிரதான கட்சிகளான  ஐ. தே. க., ஸ்ரீல. சு. க. ஆகியன, எதிர்வரும் மே தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக, இரு பிரதான கட்சிகளின் தலைமையகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம், இம்முறை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரம சிங்க தலைமையில், கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மேதின ஊர்வலம், கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டன் அரங்கிற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி, கெம்பல் மைதானத்தைச் சென்றடையவுள்ளது.

பிரதமரின் தலைமையில், கட்சித் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம்பெற்ற கட்சியின் செயற் குழுக் கூட்டத்திலேயே, இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் இவ்வருட மேதினத்தை, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமயில் கண்டி நகரில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

மே தின ஊர்வலத்தை, கண்டி – கெட்டம்பே பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கவும் முடிவு செய்துள்ளது.

கட்சித் தலைமையகமான டார்லி வீதி, ஸ்ரீல. சு. க. தலைமையகத்தில், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், மே தினக் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டாளருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வின் தலைமையில் இடம்பெற்ற, கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.