அழகிய வண்ண ஓவியத்தின் மூலம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த காஷ்மீர் இளம்பெண்

76 0

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான இளம் பெண் கலைஞரான ஷரிகா குல்சார் (Shariqa Gulzar) சமீபத்தில் கலைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

எழுத்துக்கலை மற்றும் ஓவியம் வரைவதில் அவரது விதிவிலக்கான திறமைகள் மதிப்புமிக்க இந்திய சாதனை புத்தகத்தில் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

பாரம்பரிய காஷ்மீரி நெருப்புப் பாத்திரமான காங்க்ரியின் துடிப்பான உருவப்படத்தை வரைந்ததே ஷரிகாவின் சமீபத்திய சாதனையாகும். வண்ணப் பேனாக்களைப் பயன்படுத்தி ஒரு சிறிய வரைபடத்தாளில் மிக நுட்பமாக இப்படத்தை வரைந்துள்ளார்.

20 வயதான ஷரிகா குல்சார் கலைகளில் ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே தனது கையெழுத்து மற்றும் ஓவியங்களை நேசித்தவர். எந்த ஓவியத்தையும் அழகுற வடிவமைப்பவர்.  அவரது பெற்றோர் மற்றும் சகோதரரின் ஒத்துழைப்புடன், அவர் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார்.

சமீபத்தில் ஓவிய சாதனைக்கான அங்கீகாரத்தை பெற்றபோது, தனது பெற்றோர், சகோதரரின் ஆதரவுக்கு ஷரிகா நன்றி தெரிவித்திருந்தார்.