கோட்டாவை வெளியேற்ற முடிந்த போதிலும் நாங்கள் விரும்பிய அமைப்புமுறை மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை

78 0
image
இலங்கை முன்னர் ஒருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை –மக்களின் சீற்றத்தை இலங்கையின் அரசியல் அமைப்பின் அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்த சீற்றமாக மாற்றியமைக்காக அனைவரினதும் கவனத்தையும் பாராட்டையும் பெற்றவர் மாணவ தலைவர் வசந்த முதலிகே.

கடந்த வருட கோடை காலத்தின் அமைதியின்மையின்போது கொழும்பில் அரசகட்டிடங்கள் முற்றுகையிடப்படும் நடவடிக்கைகளிற்கு இவர் தலைமைவகித்தார்- அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவமானகரமான விதத்தில் நாட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

ஒரு குழந்தையின் அப்பாவித்தனமான முகத்துடன் காணப்படும் மாணவ தலைவர்  கலகத்தடுப்பு பொலிஸாருடன் கடுமையான மோதலில் ஈடுபட்டார்- தனது நடவடிக்கைகளிற்காக பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ்  பலநாட்கள் சிறைத்தண்டனையை அனுபவித்தார் என நம்புவது கடினம்.

ஜூன் மாதம் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஏஎவ்பிக்கு கருத்து தெரிவித்தவேளை தானும் தனது இருசகாக்களும் சிறையில் சந்தித்த அனுபவங்களை அவர் விபரித்தார். எங்களை சிறந்த முறையில் வரவேற்றனர் என்றார் அவர்.

சிறைக்காவலர்கள் கூட எங்களிற்கு ஆதரவளித்தனர், அவர்கள் எங்களை கோட்டாவை அகற்றிய வீரர்களாக பார்த்தனர்  என அவர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசமைப்புமுறையை சீர்திருத்துவதற்கான போராட்டத்திற்கு மிகவும் அவசியமான விடயமே தனது சிறைவாசம் என அவர் கருத்து தெரிவித்தார்.

தற்போது பிணையில் உள்ள அவர் நீடிக்கும் பொருளாதார சிக்கல்கள் மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது அவர்கள் ஜனாதிபதி குறித்து அதிருப்தியில் உள்ளனர் இன்னுமொரு கிளர்ச்சிக்கு  தயாராகவுள்ளனர் என குறிப்பிட்டார்.

எங்களால் கோட்டாவை வெளியேற்ற முடிந்த போதிலும் நாங்கள் விரும்பிய அமைப்புமுறை மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என முதலிகே தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்க முடியாது என தெரிவித்த அவர் நிலைமையை ஆராய்ந்தால் இவர்களால் தொடரமுடியாது என்பது தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

வேறு மாற்றுவழியிருக்கவில்லை

அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளன தலைவர் என்ற அடிப்படையில் கடந்தவருடம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் அவர் முன்னணியில் நின்றார்.

அவருடன் காவிஉடையணிந்த பௌத்தமதகுருமார்களின் பரந்துபட்ட கூட்டணியும்,சிறுபான்மையின செயற்பாட்டாளர்களும்  அரசாங்கத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தினால் நாட்;டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து அதிருப்தியடைந்த பொதுமக்களும் காணப்பட்டனர்.

அவர்களிற்கு எரிபொருளோ உணவோ மருந்தோ இருக்கவில்லை அதனால் வீதியில் இறங்குவதை தவிர மாற்றுவழியிருக்கவில்லை மக்கள் பெட்ரோல் வரிசையில் உயிரி;ழந்துகொண்டிருந்தனர்  என்றார் வசந்த முதலிகே.

ஜூலை மாதம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினரும் அவர்களின் சகாக்களும் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

தமிழ்பிரிவினைவாதத்தை தோற்கடித்தமைக்காக முன்னர் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களால் போற்றப்பட்ட பாராட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச இரகசிய பின்கதவால் தப்பி நாட்டிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றனர்,அதன் செழுமையான அலங்காரங்களை பார்த்துக்கொண்டு அங்கு காணப்பட்ட நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீந்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்களை கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதன் மூலம் புதிய ஜனாதிபதி உடனடியாக சட்டமொழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயன்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பிக்கொண்டிருந்தவேளை முதலிகே கைதுசெய்யப்பட்டார்.

அவர் 167 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டார் – ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் அதிகநாட்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர் அவரே.

சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல அமைப்புகள் அவரது கைதை கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

கடந்த வருட அமைதியின்மை மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே தன்னையும் ஏனைய போராட்ட தலைவர்களையும் அரசாங்கம் தடுப்புக்காவலில் வைத்தது என வசந்த முதலிகே கருதுகின்றார்.

அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகள் வன்முறைகளிற்கு அடிபணியாத மக்களை மீண்டும் வீதிக்கு கொண்டுவரும் எனகின்றார் அவர்.

அரசாங்கம் தனக்கு எதிரான அதிருப்தியை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தை பயன்படுத்துகின்றது அது ரப்பர் பந்தினை நீரில் அமுக்குவதை போன்றது உங்களால் நீண்டநேரம் அதனை செய்ய முடியாது இறுதியாக அது வெளியில் வரும் என்றார் அவர்.