அஞ்சல் அலுவலக பெண் அதிகாரி மீது மிளகாய்த்தூள் தாக்குதல்

173 0
உப அஞ்சல் அலுவலகத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபரொருவர் அங்கு கடமையில் இருந்த பெண் தபால் அதிபர் மீது மிளகாய்த்தூளை வீசி தாக்கிவிட்டு பணத்தை அபகரிக்க முயன்றுள்ளதாக கொடவில பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மெதகொடவில பகுதியில் உள்ள உப அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் முகத்தை  மறைத்துக்கொண்டு மெதகொடவில உப அஞ்சல் அலுவலகத்துக்கு வந்த சந்தேக நபர் ஏதோ தகவல் கேட்பது போல் பாசாங்கு செய்துவிட்டு, கடமையில் இருந்த பெண் அதிகாரியின் முகத்தில் மிளகாய்த்தூளை தூவி தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த பணப்பையை குறித்த நபர் திருட முயன்றுள்ள நிலையில், அங்கு கடமையில் இருந்த தபால் அதிபர் துரிதமாக செயற்பட்டு குறித்த நபருடன் போராடி பணப்பையை மீட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் பணப்பையையும் விட்டுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பணப்பையில் சுமார் 60 ஆயிரம் ரூபா ரொக்கப்பணம் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெலிகம உடுகாவ பிரதேசத்தில் வசிக்கும் அஞ்சல் நிலைய தபால் அதிபர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கொடவில பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.