வவுனியா – பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அவ்வீதியை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (07) பார்வையிட்டார்.
அதனையடுத்து, அவ்வீதியை மக்களின் பாவனைக்கு உகந்ததாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வவுனியா – பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்டு, மக்கள் பாவனைக்காக பல கிலோ மீற்றர் சென்று கிராமத்துக்கு வரும் வகையில் பிறிதொரு பாதை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமது பழைய பாதையை மீள வழங்க வேண்டும் என கோரி கிராம மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.
இது தொடர்பாக 2018ஆம் ஆண்டு ஓமந்தை பொலிஸார் ஊடாக கிராம மக்கள் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணை படிமுறைகளை பின்தொடரும்போது நீதிவான் நீதிபதி நேற்று மதியம் ஓமந்தை புகையிரத நிலையப் பகுதிக்கு சென்று, மூடப்பட்ட பாதை மற்றும் தற்போதைய பாதைகளை பார்வையிட்டார்.

அத்துடன், புகையிரத திணைக்கள பொறியியலாளரும் கிராம மக்கள் சார்பிலான சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடிய நீதிபதி, மக்களின் இலகுவான பயணத்துக்கு ஏதுவாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் புகையிரத திணைக்களத்தினரிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து, புகையிரத திணைக்களத்தின் பொறியியலாளர் கிராம மக்கள் கோரிய இடத்தில் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லக்கூடிய விதத்தில் பாதை அமைத்துத் தருவதாக தெரிவித்ததுடன், தற்போதைக்கு பார ஊர்திகள் பயன்படுத்தும் பாதையினூடாகவே பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ள, அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி புகையிரத திணைக்களத்தினரை பணித்துள்ளார்.
இப்பாதை குறித்த மக்களின் பிரச்சினை தீர்வினை எட்டியுள்ளதுடன், அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





