ஒலுவில் துறைமுக அலைத்தடுப்பு அணை காரணமாக ஒலுவிலுக்கு வடக்கே இருக்கின்ற பல பிரதேசங்கள் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
இதற்கு எல்..எச்.ஐ. நிறுவனமும் பாெறுப்பு கூறவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ஒலுவில் துறைமுகத்தின் அலைத்தடுப்பு அனை சம்பந்தமான பிரச்சினையில் தொழிநுட்ப ரீதியில் பாரிய கோளாறு உருவாகி, இன்று ஒலுவிலுக்கு வடக்கே இருக்கின்ற நிந்தவூர், காரைதீவு,மலிகைக்காடு வரையான பிரதேசங்கள் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இது சம்பந்தமாக எல்..எச்.ஐ. நிறுவனம் பொறுப்பு கூறவேண்டும்.
இந்த நாட்டிலே இருக்கின்ற ஒரே நிறுவனம் என்ற காரணத்தினால் அந்த நிறுவத்தின் ஊடாக நடக்கின்ற இந்த பிரச்சினைகளுக்கு அவர்கள் எந்த நஷ்ட ஈடும் கொடுப்பதாக இல்லை.
எனவே ஒலுவிலுக்கு வடக்கே இடம்பெறுகின்ற இந்த பாரிய கடல் அரிப்புக்கு எல்.எச்.ஐ. நிறுவனமும் பொறுப்பு கூறவேண்டும் என்பதை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் நீங்களும் கருத்திற்கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கு கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பதிலளிக்கையில், எல்..எச்.ஐ. நிறுவனம் தொடர்பில் கவனத்து்க்கு கொண்டுவந்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
ஒலுவில் துறைமுகம் மாத்திரமன்றி நாட்டில் இருக்கின்ற ஏனைய சில இடங்களிலும் கடல் அரிப்பு தொடர்பான ஆய்வுகள் சரியாக இடம்பெறவில்லை. அரசியல் காரணங்களுக்காக அந்த ஆய்வுகள் மறுதலிக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டதாக எனக்கு அறியவருகிறது.
அத்துடன் ஒலுவில் தொடர்பில் எனக்கு எழும் கேள்வி என்ன வென்றால், இந்த துறைமுகம் கடந்த 10 வருடங்களாக பயன்பாட்டில் இல்லை.
அப்படியானால் அந்த இடம் அடைக்கப்பட்டுவிட்டது. அடைக்கப்பட்ட பின்னரும் ஏனைய இடங்களில் கடல் அரிப்பு இடம்பெறவதாக இருந்தால், அது இதன் காரணமாகவா அல்லது இயற்கை காரணமாகவா என்பது தொடர்பாகவும் ஆராய வேண்டி இருக்கிறது.
இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுடன் நாங்கள் இது தொடர்பாக கலந்துரையாட இருக்கிறோம். அதன்போது உங்களுக்கும் அழைப்பு விடுப்போம். அதில் உங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்றார்.