யேர்மனியில் 40 ஆவது ஆண்டு நினைவுகளுடன் கறுப்பு யூலை

216 0

அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே,
1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும். 1958ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் முடுக்கிவிடப்பட்ட இன அழிப்பு வன்செயல்கள், 1983 யூலை 23ஆம் திகதி வேறொரு பரிமாணத்தினைத் தொட்டது. உயிரோடு தீயிட்டும், வெட்டியும், சுட்டும், தமிழ்ப் பெண்களை பாலியல் சித்திரவதைகள் செய்தும் 3000தமிழர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமது சொந்த மண்ணினை விட்டு புலம்பெயரவேண்டிய காரணமாகவும் 83 யூலை மாத இன அழிப்பு வன்செயல்கள் அமைந்துவிட்டது. அன்பார்ந்த மக்களே,கறுப்பு யூலையின் 40 ஆம் ஆண்டு நினைவுகளோடு யேர்மன் தழுவிய ரீதியாக 23 ஆம் திகதி யூலை மாதம் தொடக்கம் 28ஆம் திகதி யூலை மாதம் வரை கறுப்பு யூலை வாரமாக, கவனயீர்ப்புப் போராட்டங்கள்,மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள் எம்மால் முன்னெடுக்கப்பட உள்ளது. இலங்கைத்தீவில் ஒற்றுமையினை விரும்பியவர்கள் தமிழர்கள். ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்டு, தமிழ் மக்களை தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தள்ளியவர்கள் சிங்கள இனவெறி அரசுகளே என்பதனை ஒன்றிணைந்து வலியுறுத்துவோம்.
1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மூலம் தாம் விரும்புவது தமிழீழத் தனியரசு என்பதனை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களும் ஒருமனதாகக் கூறிவிட்டனர். எனவே உலகில் ஜனநாயக்கத்தைப் போதிக்கும், நேசிக்கும் எந்தவொரு நாடும் தமிழீழக் கோரிக்கையினை அங்கீகரிப்பதே அவர்களது தார்மீகக் கடமையாகும்.
கறுப்பு யூலையின் 40 ஆம் ஆண்டு நினைவு சுமந்து ஒன்றிணைவதோடு, உறுதியோடு போராடி எமது உரிமைகளை வென்றெடுப்போம்.

” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “