கடன்மறுசீரமைப்பு விவகாரம் உள்ளடங்கலாக சீனாவுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் நேர்மறையான விதத்தில் அமைந்திருப்பதாகவும், இவ்வேளையில் சிறிய நாடுகளுக்கு உதவக்கூடிய வகையிலான உலகளாவிய கடன்மறுசீரமைப்பு செயற்திட்டமொன்று உருவாக்கப்படவேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர் நாடுகளில் ஒன்றான சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.
அச்சந்திப்புக்கள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்பு மற்றும் இருநாடுகளினதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்கள் என்பன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
குறிப்பாக முதலீடுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பற்றியும், சில உலகளாவிய நிலைவரங்கள் குறித்தும் கலந்துரையாடினோம்.
அதேவேளை அடுத்தகட்டமாக எமது பொருளாதார வளர்ச்சிக்கு சீனா எவ்வாறு உதவமுடியும்? குறிப்பாக நாம் முகங்கொடுத்திருக்கும் கடன்சுமை மற்றும் கடன்மறுசீரமைப்பு ஆகிய சவால்களைக் கையாள்வதற்கு சீனா எவ்வாறு உதவலாம்? என்பன பற்றி ஆராய்ந்தோம்.
நான் சீன வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் சீன ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் (எக்ஸிம் வங்கி) தலைவர் ஆகியோரைச் சந்தித்தேன். கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனா சார்பில் எக்ஸிம் வங்கியின் தலைவருடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும்.
அதன்படி இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்தன. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு அவசியமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக அவர்கள் உத்தரவாதமளித்துள்ளனர்.
அதேவேளை சாம்பியாவினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் எமக்கு பெரிதும் நம்பிக்கை அளிக்கின்றது. இவ்வேளையில் உலகளாவிய கடன்மறுசீரமைப்பு செயற்திட்டமொன்று உருவாக்கப்படவேண்டியது அவசியமென்று கருதுகின்றோம். அது சிறிய நாடுகள் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீட்சியடைவதற்கு உதவும்.
நாட்டின் பொருளாதார நிலைவரமானது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது வெகுவாக முன்னேற்றமடைந்திருக்கின்றது. எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு சீர்செய்யப்பட்டிருக்கின்றது.
பணவீக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. சுற்றுலாப்பயணிகளின் வருகையும், நிதி உட்பாய்ச்சலும் அதிகரித்திருக்கின்றது. எனவே முன்னரைவிட தற்போது நாட்டின் பொருளாதார நிலைவரம் முன்னேற்றமடைந்திருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

