அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம்!

141 0

23.06.2023 
அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளில் 90000 ஈழத்தமிழ் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு நீதி வழங்கக் கோருகின்றோம் !

கண்டுகொள்ளப்படாத பெண்களும் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் ஐக்கியநாடுகள் சபை பெண்தலைமைத்துவத்தில் உள்ள குடும்பங்களிலும் தனிநபர் வாழ்விலும் வறுமைகள், வன்முறைகள், உடல்நலப்பிரச்சினைகள், முரண்பாடுகளின் பொழுதான பிரச்சினைகள் இவற்றை உலகம் அறிந்து கொள்ளவும் இவற்றின் தீர்வுகளுக்கான வழிமுறைகளை அமைக்கவும் அனைத்துலக பெண்தலைமைத்துவ நாளை ஒவ்வொரு ஆண்டும் இன்றைய நாளில் கடைபிடித்து வருகின்றனர்.

258 மில்லியன் விதவைகள் உலகளாவிய ரீதியில் வறுமை, பாலியல் வன்கொடுமை, சுகாதாரப் பிரச்சனை, அரச, இராணுவ அடக்குமுறைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுக் கொண்டிருக்கின்றனர் என தரவுகள் உள்ள நிலையில் 2009ல் சிறிலங்காவின் ஈழத்தமிழினம் மீதான முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் 146000 ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போது தாயோ தந்தையோ அல்லது பெற்றோர் இருவரையுமே இழந்து 50000 சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் உலகின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.

இந்த இனப்படுகொலையின் விளைவாகப் பெண்தலைமைத்துவ வாழ்வுக்கு உள்ளாக்கப்பட்ட 90000 ஈழத்தமிழ் பெண்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 250000 சிறுவர்களும் 14 ஆண்டுகளில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். விதவைகள் என்ற காரணத்தினால் பெண்கள் பராமரிப்பாளர்களாக, சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரத்தை விட்டு வெளியேற்றப்படுவதால்,, பாலியல் சுரண்டல் மற்றும் கையூட்டு ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான அமைப்பின் அறிக்கை ஒன்றின்படி பெண் தமைமைத்துவ குடும்பங்கள் அத்தியாவசிய சேவைகளை அணுக அல்லது வருமானம் பெற முயற்சிக்கும்போது இராணுவ மற்றும் புலனாய்வு கட்டமைப்புகளால் பாலியல் ரீதியான பேரம்பேசல்களுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்றுவரை ஐக்கியநாடுகள் சபையின் அனைத்துலகச் சட்டங்களால் பாதுகாப்பு எதையும் பெறாத நிலையில் சிறிலங்கா படையினரின் இனங்காணக்கூடிய அச்சத்துக்கு உள்ளானவர்களாகவே பெண்தலைமைத்துவ ஈழத்தமிழ் குடும்பங்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 2300 நாட்களுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கத்தால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் நீதிக்காகவும் இந்தச் சிறிலங்காவின் இனவழிப்பால் சிதைக்கப்பட்ட தங்களின் சமூக, பொருளாதார அரசியல், ஆன்மிக, சமத்துவ உரிமைகளுக்காகவும் தெருக்களில் நின்று போராடும் பெண்கள் தங்களுக்கான பரிகார நீதியையோ அல்லது இனவழிப்பினைச் செய்தவர்களுக்கான தண்டனையையோ இதற்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலகச் சட்டங்களுக்குக் கீழ் பெற்றுத் தரவில்லையென அனைத்துலகப் பெண்தலைமைத்துவ நாளாகிய இன்றைய நாளில் பெருங்கவலையும் கோபமும் கொண்டவர்களாக உள்ளனர். அனைத்துலக நாணயநிதியம் ஈழத்தமிழர்களின் மனிதஉரிமையைப் பேணவேண்டுமென்ற நிபந்தனை விதிக்காது சிறிலங்காவுக்கு அளித்துள்ள நிதி உதவி அதன் ஈழத்தமிழின அழிப்பு அரசியலை மேலும் ஊக்குவிக்கும் எனவும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிய நாடுகளில் பெரும்பாலும் பொருளாதார தேவைக்கு ஆண்களை நம்பி வாழும் வாழ்க்கை முறையை இச்சமூகம் ஏற்படுத்தினாலும் சிங்கள அரசின் ஒடுக்கு முறைகளால், இனவழிப்பு செயற்பாடுகளால் தமது ஆன்துணையை இழந்த தமிழீழப்பெண்கள் துவண்டு போகாமல் தமது குடும்பங்களை தலைமை ஏற்று வழிநடத்தி வருகின்றனர். இவர்களுக்கான சிங்கள அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் உலக நிறுவனங்களின் உதவிகள் போதுமானதாக இல்லை. இதேவேளை சர்வதேச அமைப்புகளை சாடும் உலகத் தமிழர்களாக வாழும் நாம் 90000 பெண்களின் தலைமையில் வாழும் இந்த 250000 சிறுவர்களுக்கும் என்ன சமுகப் பாதுகாப்பை இதுவரை உருவாக்கியுள்ளோம் என்பது விடை காணப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.

தனி நபர்களாகவும் சிறு குழுக்களாகவும் சிறிதளவு உதவிகள் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களை சென்றடைகின்றன. ஆனால் இவ்வாறு சிறு சிறுதுளிகளாக உதவிகளைச் சிதறடிப்பது எவ்வாறு முழு குடும்பங்களுக்கும் உரிய பாதுகாப்பை உரிய நேரத்தில் வழங்கும் என்பதும் பெருங்கேள்வியே. ஆகவே இந்த மனிதநேயத் தேவையினை நிறைவேற்றவாவது உலகத் தமிழர்களாக உள்ள நாம் ஒரு பொது வெளியில் கூட்டொருங்குச் செயற்பாட்டினை உருவாக்க வேண்டும் என்பது தான் இன்றுள்ள தேவையாகவும் அழைப்பாகவும் உள்ளது. இதனை அழைப்போடு மட்டும் நிறுத்தி விடாது உரிய செயற்திட்டத்தினை உருவாக்கி முன்னெடுக்க ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் முயல்கிறது. இணைந்து பணியாற்ற விரும்புவார்கள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டால் தமிழர் தாயத்தில் உள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும், அவர்களின் வளர்ச்சிக்கும் உதவி, எமது தேசக்கடமையை ஆற்ற முன்வருவோம், என்று இன்றைய நாளில் உறுதி கொள்வோம்.

“பெண்விடுதலை இல்லையேல் மண்விடுதலை இல்லை”
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்