மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு , இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மலேசிய விமான சேவை மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் , மேலும் இரு விமான சேவை நிறுவனங்கள் கோலாலம்பூர் மற்றும் கொழும்புக்கிடையில் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் , உயர்ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
மலேசியாவுக்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சில தரப்பினரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் மலேசிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இலங்கையின் முதல் 6 முதலீட்டு பங்காளிகளில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் வளர்ந்து வரும் ஹோட்டல் தொழில்துறைக்கு மேலதிகமாக, இலங்கையில் முதலீடு செய்வதற்கான புதிய துறைகளில் ஈடுபடுமாறு மலேசிய தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

