வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு-; ரவி கருணாநாயக்க(காணொளி)

259 0

வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில், மீளச் செலுத்த வேண்டிய கடன்தொகை 5.6 பில்லியன் டொலரை எட்டியுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய கடன்களைப் பெற்று மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய திட்டங்களை இடைநிறுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக, பொது – தனியார் கூட்டு மற்றும் கைமாற்றம் செய்யும் அடிப்படையிலான திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் எனவும்

இத்தகைய திட்டங்களுக்கு காணிகள் மட்டும் குத்தகைக்கு வழங்கப்பட்டு, பங்கு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் புதிய கடன்கள் பெறப்படாது எனவும் தெரிவித்தார்.

மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகள் இதேபோன்ற அபிவிருத்தி மூலோபாயத்தை பயன்படுத்தியே தமது பொருளாதாரங்களை பலப்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாம் அத்தகைய முறையை நோக்கி நகராவிடின், கடனைத் தீர்க்க முடியாமல், புதிய கடன்களை பெற வேண்டிய நிலைதான் ஏற்படும் என்றும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு வெளிநாட்டு கடன்களைப் பெறுவதை நிறுத்தினால் தான், நாடு பொருளாதார ரீதியில் தப்பிக்க முடியும் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.