கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

305 0

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன் நிறைவடைந்தது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டப்பட்ட பின்னர் நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு

வழபாடுகளில் ஈடுபட்டனர்.

இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் நடக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம்.

எனினும், சுமார் ஆயிரம் பேர் வரையிலேயே ஒன்று கூடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை இரவு கச்சதீவு அருகே தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்க தமிழ்நாட்டு மீனவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதனால் தமிழ்நாட்டில் இருந்து கச்சதீவு திருவிழாவுக்கு எவரும் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த குருமாருடன் இணைந்தே கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவது வழக்கமாகும். இம்முறை அவர்கள் வருகை தராததால், இலங்கையைச் சேர்ந்த கத்தோலிக்க குருமாரே திருப்பலி ஒப்புக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.