செந்தில் பாலாஜியிடம் 3 நாட்களாகியும் விசாரணை நடத்த முடியாத அமலாக்க துறை – கேமராக்கள் மூலம் பார்வையாளர்கள் கண்காணிப்பு

61 0

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தது. அதேநேரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் நேற்று முன்தினம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய உடனே, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 3 நாட்கள் முடிவடைந்தும் நேற்று வரை அமலாக்கத்துறை சார்பில் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து, செந்தில் பாலாஜி உடல் நிலையை பரிசோதித்து அமலாக்கத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள் என கூறப்பட்டது. ஆனாலும், தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவர்களும் வருகை தரவில்லை. அதேநேரத்தில், மருத்துவமனை வளாகத்தில் அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம், மருத்துவமனை உள்ளே, யார் யார் வந்து செல்கிறார்கள் என்பது குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் மருத்துவர்களிடம் அனுமதி கேட்கும் போது, அவர் தொடர்ந்து ஓய்வில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால், செந்தில் பாலாஜியிடம் மருத்துவமனையில் வைத்து விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, 8 நாட்கள் காவலில் விசாரணை நடத்த முடியவில்லை என்றால், அதையே காரணமாக கூறி, மேலும் சில நாட்கள் காவலை நீட்டித்து விசாரணை நடத்தலாமா அல்லது அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, சில நாட்கள் கழித்து அவரை காவலில் எடுக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக மூத்த அதிகாரிகளிடம் பேசி, அவர்கள் உத்தரவு அளித்த பிறகு, மீண்டும் நீதிமன்றத்தை நாட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.