“என்னை சீண்டினால் திருப்பி அடிப்பேன்” – தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு எச்சரிக்கை

76 0

 திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று குஷ்பு தெரிவித்தார். பெண்களை இழிவாக பேசி வரும் திமுகவினர், என்னை சீண்டினால் திருப்பி அடிப்பேன் என அவர் எச்சரித்துள்ளார்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டத்தில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் குஷ்பு நேற்று கூறியதாவது:

திமுகவின் மூன்றாம்தர பேச்சாளர் ஒருவர் மேடையில் என்னை பற்றி மிகவும் தரக்குறைவாக, அவதூறாக பேசியுள்ளார். ஏற்கெனவே இதுபோல பேசி, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு கட்சியில் இணைந்த அவர், மீண்டும் அதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பெண்களை இழிவாக பேசுவதுதான் திராவிட மாடல். நான் எனக்காக வரவில்லை. நாட்டின் அத்தனை பெண்களுக்காகவும் பேசுவதற்காக வந்திருக்கிறேன். பாஜக உறுப்பினராக நான் கேட்கும் கேள்விக்கு திமுகவினரால் பதில் அளிக்க முடியவில்லை. அதனால்தான் இவ்வாறு செய்கின்றனர். திமுக மூத்த தலைவர்கள் அனைவரும் கதவுகளுக்கு பின்னால் நின்று, இதுபோன்ற மூன்றாம்தர பேச்சாளர்களின் பேச்சை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களை இழிவாக பேச இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது. பெண்கள் பற்றி இழிவாக பேசுவதை திமுகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக கடும் நடவடிக்கை எடுப்பேன். திமுகவினர் என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம். நான் திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள்.

இவர்களைப்போல பெண்களை இழிவாக பேசுவோரை கட்சியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும். அவர்களுக்கு தீனி போட்டு வளர்ப்பதை திமுகவினர் நிறுத்த வேண்டும்.

செந்தில் பாலாஜி தமது பெயரை சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் திமுகவினர் உள்ளனர். அதனால், அந்த வழக்கை திசை திருப்புவதற்காக, இதுபோன்ற பேச்சாளர்களை வைத்து பெண்களை இழிவாக பேசுகின்றனர். கலைஞர் இருக்கும்போது இருந்த திமுகவுக்கும், இப்போது இருக்கும் திமுகவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுக்கும். இதனால், திமுகவினர் என் வீட்டு வாசலில் வந்து நின்று கல் வீசினாலும் கவலை இல்லை. அனைத்தையும் சந்திப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடையிடையே, உணர்ச்சிவசப்பட்ட குஷ்பு கண்கலங்கியபடி பேசினார். இதற்கிடையே, திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு நன்றி தெரிவித்த குஷ்பு, “இதோடு இது நின்றுவிட கூடாது. இதுபோன்ற அனைத்து பேச்சாளர்கள் மீதும் திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சி ரீதியாக அவர்கள் நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். இனி, மகளிர் ஆணையம் சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்றார்.