இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அவசியம்

137 0

இலங்கை இவ்வருட இறுதிக்குள் தனது கடனை மறுசீரமைப்பதோடு , இறக்குமதிக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது முக்கியமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு டில்லியிலிருந்து வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கடன்களை மீள் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையானது இலங்கை செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வதேச சட்டத்துக்கு முரணானதாகும்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தம் காரணமாக  காரணமாக சர்வதேச சமூகம் அதனை அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு தொடர்ந்தும் பயணிக்க முடியாது.

எனவே கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் அதே வேளை , இறக்குமதி தளர்வுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. அதன் அடிப்படையில் பணவீக்கத்தைத் தூண்டாத வகையில் வட்டி விகிதங்களை பேணுவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரூபாவின் பெறுமதியில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றமையும் இந்த காரணியிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறு நெருக்கடிகளிலிருந்து படிப்படியாக மீண்டு வரும்போது, புதிய சவால்களை சந்திக்க நேரிடும். ஆண்டிறுதியில் முழுமையான நிலைவரத்தை அறிந்து கொள்ள முடியும்.

2024இல் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி 1.4 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்றும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.