அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சி ஆரம்பித்துள்ளது

165 0

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களை சாதகமாக்குவதே அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பாகவும்,  முயற்சியாகவும் இருந்தது. இருப்பினும் சில பொருளாதார நெருக்கடிகள் தற்போது காணப்படுகின்றன.

ஆனாலும் நெருக்கடிகளுக்கு மத்தியில் எமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு செல்லுமாகவிருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வலப்பனை பகுதியில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இன்று நாட்டின் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. தொழில் வாய்ப்புகளை பலர் இழக்கின்றனர்.

உற்பத்தி துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. வரி அதிகரித்துள்ளது. வங்கிகளின் வட்டி வீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதிகளுக்கும் வரி அதிகரித்தமையால் எமது நாட்டுக்கு தொழிற்சாலைகள் வருவதில்லை. அதனை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

சில பொருளாதார நெருக்கடிகள் எமது நாட்டில் காணப்படுகின்றன. ஆனாலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எமது நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு செல்லுமாகவிருந்தால்  கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்தும் இரண்டாவது சூழ்ச்சியின் அத்தியாயம் ஆரம்பித்துள்ளதாக என்னால் தெளிவாக கூறமுடியும்.

மக்களை கவனிக்குமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம். தொழில்கள் இல்லாமல் செய்ய வேண்டாம். பல துறைகளில் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. கிராமங்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கு காரணம் என்னவெனில் கிராமத்தின் உற்பத்தி பொருளாதாரம் எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களை சாதகமாக்குவதே அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பாகவும், முயற்சியாகவும் இருந்தது. அந்த கலந்துரையாடல்கள் சாதகமாகும் போது எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வீழ்ச்சியடையுமாக இருந்தால், எமது கிராம மக்களின் சிறிய விவசாயம் வீழ்ச்சியடையுமாக இருந்தால்,

கிராமத்திலுள்ள அம்மா, அப்பாக்களின் பிள்ளைகளின் தொழில்கள் பறிக்கப்படுமாகவிருந்தால் மற்றுமொரு நெருக்கடியிலிருந்து வெளிவர பல ஆண்டுகள் ஆகும் என்றார்.