கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்

65 0

கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்,தனிப்பட்ட முறையில் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடமாட்டோம்.

தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவுக்கும் ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நெலும் மாவத்தையில் இடம்பெற்றது.இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். முறையற்ற தீர்மானங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை.

இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கட்சி மட்டத்தில் உள்ளக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.எதிர்வரும் வாரம் சகல தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் தீர்மானம் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்.தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கை எமக்கு கிடையாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி என்ற ரீதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம்.அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கம் எமக்கு கிடையாது.தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிக்குமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என்றார்.