துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை பிரதான அமைப்பாளருமான பி. டி. அபேரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று வியாழக்கிழமை ஹொரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் சந்தன கலங்சூரிய உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதுடன்,கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதேவேளை, அவரது துப்பாக்கியை நீதிமன்ற பொறுப்பில் எடுத்து பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அதன் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரனை தொகுதி அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.டி. அபேரத்ன ஹொரனை, பொரலுகொடவிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான காணிக்குள் அனுமதியின்றி பிரவேசித்த சிலருடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
காணியை பராமரிப்பதற்காக குறித்த காணியில் தம்பதியொருவர் தங்கியுள்ளதுடன், வெளியாட்களை அழைத்து வர வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் தம்பதிக்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், புதன்கிழமை குறித்த காணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சென்ற போது வெளியாட்கள் குழுவொன்று அங்கிருந்ததாகவும், அவருடன் தங்கியிருந்தவர்கள் தகராறு செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹொரண பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் அபேரத்னவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

